Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

பொதுத்துறை நிறுவனங்களை விற்க ஒன்றிய அரசு முயற்சி அதிமுக புதிய கூட்டணியின் நிலைப்பாடு என்ன? அமைச்சர் தங்கம் தென்னரசு கேள்வியால் பரபரப்பு

சென்னை: தமிழக சட்டப் பேரவையில் நேற்று தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தக துறை, தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை ஆகிய மானிக் கோரிக்கைகள் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு வாணியம்பாடி செந்தில்குமார் (அதிமுக) பேசியதாவது: காங்கிரஸ் மத்தியில் ஆட்சியில் இருந்தபோது, என்.எல்.சி. நெய்வேலி பங்குகளை தனியாருக்கு விற்க முயன்றபோது, அந்த பங்கினை வாங்கி தமிழக தொழிலாளர்களின் வேலைவாய்ப்பினை உறுதி செய்தது அதிமுக அரசு.

அமைச்சர் சி.வி.கணேசன்: நெய்வேலி பொதுத்துறை நிறுவனங்களுடைய பங்குகள் விற்கப்படுமேயானால், மத்திய அரசாங்கத்திற்கு கொடுத்துக் கொண்டிருக்கக்கூடிய ஆதரவை விலக்கிக்கொள்வேன் என்று கருணாநிதி சொன்னார். அந்த காரணத்தினால் தான், இன்றைக்கு நெய்வேலியில் அங்கு பணியாற்றுகிற பணியாளர்கள் பாதுகாக்கப்பட்டுள்ளனர்.அமைச்சர் தங்கம் தென்னரசு: நீலகிரி மலை ரயில் உட்பட்டிருக்கக்கூடிய தனியார்களுக்கு ஒப்படைக்கக்கூடிய முயற்சியை ஒன்றிய அரசு மேற்கொண்டிருக்கிறது. பொதுத் துறையினுடைய நிறுவனங்களை தனியார்வசமோ அல்லது வேறுவசமோ இன்றைக்கு அவர்கள் விற்பனை செய்வதற்கு தயாராக இருக்கக்கூடிய சூழ்நிலையில், ஒன்றிய பாஜ அரசின் நிலைப்பாட்டை நீங்கள் ஆதரிக்கிறீர்களா என்பதை நீங்கள் சொல்ல வேண்டும். காரணம் என்னவென்றால், அவர்கள் அந்த முடிவை எடுத்துச்செய்து கொண்டிருக்கிறார்கள். நீங்கள் இப்போது ஒரு புது உறவில் ஈடுபட்டிருக்கிறீர்கள். இந்த உறவினுடைய அடிப்படையில் உங்களுடைய நிலைப்பாடு என்னவென்பதை நான் அறிய விரும்புகிறேன்.

அதிமுக கொறடா எஸ்.பி.வேலுமணி: கூட்டணி வேறு, கொள்கை வேறு. எங்களுடைய கொள்கைப்படி, கண்டிப்பாக, நாங்கள் அதை ஏற்றுக்கொள்ள மாட்டோம். விற்பதற்கு நாங்கள் ஒத்துக்கொள்ள மாட்டோம்.

அமைச்சர் தங்கம் தென்னரசு: கூட்டணி வேறு, கொள்கை வேறு என்றால், கொள்கையை சமாதானம் செய்து கொண்டிருக்கக்கூடிய ஒரு கூட்டணி இதுதானா?.

ஆர்.பி.உதயகுமார்: ஒவ்வொரு கட்சிக்கும் ஒரு கொள்கை இருக்கும். கூட்டணி என்பது தேர்தல் நேரத்தில்தான். கம்யூனிஸ்ட் கட்சி என்றால் ஒரு கொள்கை இருக்கும். அது வேறு. இப்போது அவர்கள் நிறைய பிரச்னைகளுக்கு ஆர்ப்பாட்டம் செய்கிறார்கள். சிலவற்றுக்கு ஒத்துப் போய் விடுகிறார்கள். கம்யூனிஸ்ட் கட்சிகள் பழையபடி ஆர்ப்பாட்டம் செய்வதில்லை. இருந்தாலும், இப்போது சிலவற்றுக்கு ஆர்ப்பாட்டம் செய்கிறார்கள். அதேபோல, காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணியில் இருந்தபோதுதான் அதை விற்பதற்கு நீங்களும் சேர்ந்து அனுமதித்தீர்கள். இவ்வாறு விவாதம் நடந்தது.