Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

பொது நூலகங்களுக்கு நேர்மையான முறையில் வெளிப்படையாக ரூ.40 கோடிக்கு புத்தகங்கள் கொள்முதல்: நூலகர்கள் பாராட்டு

* சிறப்பு செய்தி

வெளிப்படைத்தன்மையான நூல் கொள்முதல் கொள்கை மூலம், சுமார் 40 கோடி ரூபாய்க்கு நூல் கொள்முதல் செய்யப்பட்டுள்ள தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த அதிமுக ஆட்சியில் நூலகங்களுக்கு புத்தகங்கள் கொள்முதல் செய்வதில் பெரிய அளவில் முறைகேடுகள் நடைபெற்றதாகவும், இடைத்தரகர்கள் மூலம் புத்தகங்கள் கொள்முதல் செய்யப்படுவதாகவும் புகார்கள் எழுந்தன. இதனால் திமுக அரசு பதவி ஏற்ற பிறகு, தமிழ்நாடு அரசின் பொது நூலகங்களுக்கு நூல்கள் கொள்முதல் செய்வதில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்ய முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.

அதைத் தொடர்ந்து, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சட்டப்பேரவையில் இதற்கான அறிவிப்புகளை வெளியிட்டார். ‘‘வெளிப்படைத்தன்மையான நூல் கொள்முதல் கொள்கை 2024’’ உருவாக்கப்பட்டது. இந்தக் கொள்கையின்படி பொது நூலகங்களுக்கு புத்தகங்கள் கொள்முதல் செய்யும் பொருட்டு, நூலகங்களுக்கான நூல் கொள்முதல் செய்வதற்கு ஓர் பிரத்யேக இணையதளம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த இணையதளம் வாயிலாக அவ்வப்பொழுது வெளியிடப்படும் ஐஎஸ்பிஎன் பதிவு எண் கொண்ட நூல்கள் அனைத்தையும் ஆண்டு முழுவதும் விண்ணப்பம் செய்வதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பின் மூலம் பதிப்பாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் கடந்த காலங்களில் ஒரு குறிப்பிட்ட மாதத்தில் மட்டுமே விண்ணப்பிக்க இயலும் என்ற நிலையை மாற்றி எப்பொழுது வேண்டுமானாலும் தங்களது புத்தகத்தை இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என்ற நிலை உருவாக்கப்பட்டுள்ளது. வெளிப்படைத்தன்மையான நூல் கொள்முதல் இணையதளமானது, பதிப்பாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் தாங்களாகவே விண்ணப்பிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. அரசாணையில் தெரிவித்துள்ள வெளிப்படைத்தன்மையான நூல் கொள்முதல் கொள்கையின்படி, 2024 முதல் பதிப்பாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்களிடமிருந்து மாதிரி படி நூல்கள் சென்னை கோட்டூர்புரம், அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் பெறப்படுகிறது. மேலும் இணையதளம் வாயிலாக நூல்களின் சுருக்கமும் பெறப்படுகிறது.

பதிப்பாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்களால் விண்ணப்பிக்கப்படும் நூல்கள் பல்வேறு துறை சார்ந்த பாட வல்லுநர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு, இந்த இணையதளத்தில் பதிவு செய்யப்படும். இவ்வாறு பதிவு செய்யப்பட்ட நூல்களில், ஒவ்வொரு நூலகத்திற்கும் வரவு செலவு திட்டத்தின் கீழ் ஒதுக்கப்படும் நிதி நிலைக்கு ஏற்ப பொது நூலக துறையின் வரலாற்றில் முதன்முறையாக அந்தந்த நூலக வாசகர்களே தங்கள் நூலகத்திற்கு தேவையான நூல்களை தேர்வு செய்யும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற வெளிப்படைத்தன்மையான புத்தகக் கொள்முதல் நடைமுறையை எந்த மாநில அரசும் இதுவரை செயல்படுத்தியதாக தெரியவில்லை. இதன் மூலம் தரமற்ற தேவையில்லாத புத்தகங்கள், இடைத்தரகர்கள் மூலம் பொது நூலகங்களுக்கு கொள்முதல் செய்வது தடுக்கப்பட்டுள்ளது.

எளிதாக பயன்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த இணையதளத்தில், பதிப்பாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் நூல்களின் விபரங்களை பதிவேற்றம் செய்தல், பதிவேற்றம் செய்த நூல்களின் விபரங்களை மெட்டா செக்கிங் எனும் முறையில் சரிபார்த்தல், சரிபார்க்கப்பட்ட நூல்களின் விபரங்கள் பாடவாரியாக அந்தந்த பாட வல்லுனர்களுக்கு மதிப்பாய்வு செய்வதற்காக வழங்குதல்,மதிப்பாய்வு செய்யப்பட்ட நூல்களுக்கு விலை நிர்ணயம் செய்தல், விலை நிர்ணயம் செய்யப்பட்ட நூல்களை சம்பந்தப்பட்ட பதிப்பாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்களுக்கு விலை குறைப்பு பேச்சு வார்த்தை நடத்துதல், தேர்வு செய்யப்பட்ட அனைத்து நூல்களையும் நூலகங்களின் வாசகர் வட்ட தேர்வுக்கு அனுப்பி வைத்தல், தேர்வு செய்யப்பட்ட நூல்களுக்கான நூல் கொள்முதல் ஆணைகளை சம்பந்தப்பட்ட பதிப்பாளர் மற்றும் விநியோகஸ்தர்களுக்கு வழங்குதல், நூல்கள் பெறப்பட்டவுடன் சம்பந்தப்பட்ட பதிப்பாளர் மற்றும் விநியோகஸ்தர்களுக்கு தொகை வழங்குதல் என அனைத்து பணிகளையும் வெளிப்படைத்தன்மையான நூல் கொள்முதலுக்கு என்று பிரத்தியேகமாக உருவாக்கப்பட்ட இணையதளத்தின் வழியாகவே மேற்கொள்ளும் வண்ணம் உருவாக்கப்பட்டுள்ளது.

பதிப்பாளர்கள் அல்லது விநியோகஸ்தர்கள் நேரில் சென்று யாரையும் பார்க்கத் தேவையில்லாத வகையில் இந்த இணையதள கொள்முதல் வடிவமைக்கப்பட்டுள்ளது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இவ்வாறு வடிவமைக்கப்பட்ட இணைய தளத்தின் வழியாக விண்ணப்பிக்கப்பட்ட 414 பதிப்பாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்களின் நூல்கள், நூல் தேர்வுக் குழு உறுப்பினர்களின் மதிப்பாய்வுக்கு உட்படுத்தப்பட்டு, பதிப்பாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்களிடம் நூல் விலைக்குறைப்பு பேச்சுவார்த்தை இணையதளம் வழியாக நடத்தப்பட்டு இறுதியாக தமிழ்நாடு முழுவதும் உள்ள 3873 நூலகங்களை பயன்படுத்தும் அந்தந்த நூலக வாசகர் வட்ட உறுப்பினர்கள் மற்றும் நூலகர்கள் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. தற்போது சுமார் 40 கோடி ரூபாய் மதிப்பில், 6,416 தலைப்பிலான நூல்களின் 22,17,379 பிரதிகளுக்கு நூல்கொள்முதல் ஆணைகள் சமீபத்தில் வழங்கப்பட்டுள்ளது. இந்த வெளிப்படைத்தன்மையான நூல் கொள்முதல் மூலம் இடைத்தரகர்கள் வருகை டிபிஐ வளாகத்தில் முற்றிலும் நின்றுவிட்டது. முறைகேடுகளும் முற்றிலும் தடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.