சென்னை: தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்ட அறிக்கை: கடந்த அக்டோபர் மாதம் 1ம் தேதி மத்தியபிரதேச மாநிலம் சிந்த்வாரா மாவட்டத்தில் ஏற்பட்ட குழந்தைகள் மரணத்துக்கு தொடர்புடையதாக கருதப்படும் மருந்து, கோல்ட்ரிப் சிரப் குறித்த விவரம் பெறப்பட்டது. இது தொடர்பாக, அன்றைய தினமே சுமார் 4 மணியளவில், ஸ்ரீசன் பார்மசியூட்டிகள் நிறுவனத்தில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மேலும் கடந்த 1ம் தேதி தமிழ்நாடு முழுவதும் சந்தேகத்திற்குரிய கோல்ட்ரிப் சிரப் விற்பனை மாநிலம் முழுவதும் தடை செய்யப்பட்டது.
பகுப்பாய்வின் முடிவில் டைஎதிலீன் கிளைகால் என்ற உயிர்க்கொல்லி நச்சு வேதிப்பொருள், கோல்ட்ரிப் சிரப்பில் 48.6 சதவீதம் இருப்பதாக கடந்த 2ம் தேதி கண்டறியப்பட்டது. கடந்த 3ம் தேதி ஸ்ரீசன் பார்மசியூட்டிகள் நிறுவனத்திற்கு பொதுநலன் கருதி மருந்து உற்பத்தியை உடனடியாக நிறுத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டு அந்நிறுவனம் உடனடியாக மூடப்பட்டது. இவ்வாறு, தகவல் பெறப்பட்ட 48 மணிநேரத்தில் தமிழ்நாடு அரசின் மருந்து கட்டுப்பாட்டு துறையால் துரித நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இந்த தகவல்கள் அனைத்தும் மத்தியப் பிரதேச மருந்து கட்டுப்பாட்டு துறைக்கும் உடனடியாக கடந்த 3ம் தேதி மின்னஞ்சல் மூலமாக மேல் நடவடிக்கைக்காக அனுப்பப் பட்டது.
மேலும், தமிழ்நாடு காவல் துறையின் உதவியுடன் மத்திய பிரதேச சிறப்பு புலனாய்வு பிரிவு நேற்று அதிகாலை சென்னை அசோக் நகர் பகுதியில் நிறுவனத்தின் உரிமையாளர் ரங்கநாதன் (75) என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அந்நிறுவனத்தில் 2021 மற்றும் 2022ம் ஆண்டுகளில் ஆய்வு முறையாக மேற்கொள்ளப்பட்டு இந்நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தாலும், கடந்த ஆண்டில், உரிய ஆய்வு மேற்கொள்ளாத காஞ்சிபுரம் முதுநிலை மருந்துகள் ஆய்வாளர் இருவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு, துறை ரீதியான மேல் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் அமைந்துள்ள இதர மருந்து உற்பத்தி நிறுவனங்கள் மீது விரிவான ஆய்வு மேற்கொள்ள ஆணைகள் வழங்கப்பட்டு, அதன் அடிப்படையில் மாநிலம் முழுவதும் விரிவான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.