சென்னை: தமிழகத்தின் மாநில கல்விக் கொள்கை பரிந்துரையின்படி இந்த கல்வி ஆண்டு முதல் பிளஸ் 1 வகுப்புக்கான பொதுத் தேர்வு ரத்து செய்யப்படுகிறது. இதற்கான அரசாணையை பள்ளிக்கல்வித்துறை நேற்று வெளியிட்டது. மாநில அரசுக்கென தனியாக கல்விக் கொள்கை தமிழக அரசு உருவாக்கியுள்ளது. மேனிலைக் கல்வியில் பிளஸ் 1 வகுப்புக்கு பொதுத் தேர்வு தேவையில்லை என்றும் மாநில கல்விக் கொள்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கல்விக் கொள்கை பரிந்துரைகள் கடந்த மாதம் வெளியிடப்பட்டுள்ள நிலையில், தற்போது அந்த பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த அரசாணையும் தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இதன்படி இ ந்த ஆண்டு முதல் பிளஸ் 1 வகுப்புக்கு பொதுத் தேர்வு இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இது குறித்து பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலார் சந்தரமோகன் வெளியிட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டுள்ளதாவது: கடந்த 1980ம் ஆண்டு வெளியிடப்பட்ட அரசாணையின்படி மார்ச் முதல் மாநில அளவில் பிளஸ் 2 வகுப்புக்கு பொதுத் தேர்வு நடத்த தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கு பிறகு 2017ம் ஆண்டு வெளியிடப்பட்ட அரசாணையின்படி 2017-2018ம் ஆண்டு முதல் மார்ச் மாதம் பிளஸ் 1 வகுப்புக்கு பொதுத் தேர்வு நடத்த தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், மாணவர்கள் நலன் கருதியும், பொதுத் பொதுத் தேர்வு தொடர்பான பதற்றம் மற்றும் மேனிலை கல்வியை மாணவர்கள் உறுதியுடன் கற்கவும், மாநிலக் கல்விக் கொள்கையை செயல்படுத்தும் வகையிலும் 2025-2026ம் கல்வி ஆண்டு முதல் பிளஸ் 1 வகுப்புக்கு பொதுத் தேர்வு ரத்து செய்ய வேண்டும் என்று பள்ளிக் கல்வி இயக்குநர், அரசுக்கு கடிதம் எழுதினார். இயக்குநரின் கடிதத்தை ஏற்று, பின்வருமாறு அரசு ஆணையிடுகிறது: அதன்படி 2025-2026ம் கல்வி ஆண்டு முதல் பிளஸ் 1 வகுப்புக்கான அரசுப் பொதுத் தேர்வு ரத்து செய்யப்படுகிறது. மேலும், 2017-2018ம் ஆண்டுக்கு முன்பு பிளஸ் 1 வகுப்புக்கு நடைமுறையில் இருந்து தேர்வை நடத்த அனுமதி வழங்கப்படுகிறது.
2025-2026ம் கல்வி ஆண்டு முதல் மேனிலை வகுப்புகள் படிக்கும் மாணவர்களுக்கு ஒருங்கிணைந்த மதிப்பெண் சான்று வழங்கும் முறையை மாற்றி அவர்கள் பிளஸ்2 வகுப்பு அரசு பொதுத் தேர்வு எழுதிய பிறகு பிளஸ்2 வகுப்பு மதிப்பெண்கள் மட்டும் உள்ளடக்கிய மதிப்பெண் சான்று வழங்கும் முறையை நடைமுறைப்படுத்த அரசுத் தேர்வுகள் இயக்குநருக்கு அனுமதி வழங்கப்படுகிறது. மேலும், ஏற்கெனவே பிளஸ் 1 வகுப்பில் பொதுத்தேர்வில் தோல்வி அடைந்த மாணவர்களுக்கு மட்டும் பொதுத் தேர்வை அடுத்த 5 ஆண்டுகளுக்கு அதாவது 2030 மார்ச் வரையில் தொடர்ந்து நடத்த அரசுத் தேர்வுகள் இயக்குநருக்கு அனுமதி வழங்கப்படுகிறது. இவ்வாறு அரசு முதன்மைச் செயலாளர் சந்தரமோகன் தனது அரசாணையில் தெரிவித்துள்ளார்.