Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

ஏப்ரல்- ஆகஸ்ட் காலக்கட்டத்தில் ரூ.3,273 கோடி வருவாய் ரயில் பயணியர் கட்டண வசூலில் முதலிடம் வகித்தாலும் தமிழ்நாட்டில் புதிய திட்டங்களை புறக்கணிக்கும் ஒன்றிய அரசு: பொதுமக்கள் குற்றச்சாட்டு

சென்னை: நாட்டிலேயே பயணியர் கட்டண வசூலில் தெற்கு ரயில்வே முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளது. ஆனாலும் திட்டங்களை செயல்படுத்தும் விஷயத்தில் தெற்கு ரயில்வேயை ஒன்றிய அரசு தொடர்ந்து புறக்கணிப்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். நாட்டிலேயே பயணியர் கட்டண வசூலில் தெற்கு ரயில்வே முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளது. தற்போது தெற்கு ரயில்வேக்குள் சென்னை, திருச்சி, மதுரை, திருவனந்தபுரம், சேலம், பாலக்காடு என மொத்தம் 6 கோட்டங்கள் உள்ளன. இவற்றின் கீழ் செயல்படும் 727 ரயில் நிலையங்கள் வழியாக, கடந்த ஏப்ரல் முதல் ஆகஸ்ட் மாதம் வரை மொத்தம் 32 கோடியே 15 லட்சம் பயணிகள் பயணித்துள்ளனர். இது, கடந்த ஆண்டின் அதே காலக்கட்டத்தை விட 6.58% அதிகரிப்பு ஆகும். வருவாய் வசூலில் கூட, தெற்கு ரயில்வே முதலிடத்தில் தான் உள்ளது. பயணியர் கட்டணம் மூலமாக மட்டுமே கடந்த ஏப்ரல் ஆகஸ்ட் 2025 காலக்கட்டத்தில் ரூ.3,273 கோடி வருவாய் ஈட்டியுள்ளது. இது, முந்தைய ஆண்டைவிட 4.71% அதிகரிப்பு ஆகும்.

புறக்கணிப்பு குற்றச்சாட்டு வருவாயிலும், பயணியர் எண்ணிக்கையிலும் முன்னிலையில் இருந்தாலும், தெற்கு ரயில்வே, குறிப்பாக தமிழ்நாடு, ஒன்றிய அரசால் புறக்கணிக்கப்படுகிறது என்ற குற்றச்சாட்டை பயணிகள் முன்வைக்கின்றனர். புதிய ரயில் திட்டங்கள் அறிவிப்பில், வட மாநிலங்களுக்கு அளிக்கப்படும் முக்கியத்துவம், தமிழ்நாட்டுக்கு கிடைப்பதில்லை என குற்றம் சாட்டுகின்றனர். உத்திரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், பீகார், ராஜஸ்தான் போன்ற இந்தி பேசும் மாநிலங்களுக்கும், குஜராத், மகாராஷ்டிரா போன்ற பாஜக ஆளும் மாநிலங்களுக்கும் தொடர்ந்து புதிய ரயில் அறிவிப்புகள் வெளியாகின்றன. ஆனால் தமிழ்நாடு போன்ற தென்னிந்திய மாநிலங்களுக்கு அதே அளவிலான கவனம் கிடைப்பதில்லை என்பது பயணிகளின் மனக்கசப்பாக இருக்கிறது.

பிரதமர் நரேந்திர மோடி மூன்றாவது முறையாக பதவி ஏற்ற பிறகு கடந்த 15 மாதங்களில் மட்டும் பீகாருக்கு பத்துக்கும் அதிகமான புதிய ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம், ஒரு லட்சம் கோடி ரூபாய் மதிப்பில் நடைபெறும் புல்லட் ரயில் திட்டம் மகாராஷ்டிரா குஜராத் இடையே மட்டுமே நடைபெறுகிறது என்பதையும் பயணிகள் சுட்டிக்காட்டுகின்றனர். அதே சமயம் தெற்கு ரயில்வே சார்பில்,சென்னை எழும்பூரில் இருந்து ராமேஸ்வரம் வரை வந்தே பாரத் ரயில் விரைவில் இயக்கப்பட உள்ளது.தஞ்சாவூர் மைசூரு இடையே வந்தே பாரத் ரயில் சேவை தொடங்குவதற்கான அனுமதி வாரியத்திடம் கோரப்பட்டுள்ளது.கோயம்புத்தூர் சென்னை வந்தே பாரத் ரயிலின் பெட்டிகள் தற்போது 8 ஆக இருந்ததை, விரைவில் 16 பெட்டிகளாக அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், சென்னை பெரம்பூரில் 342 கோடி ரூபாய் செலவில் புதிய ரயில் முனையம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இதற்கான ஒப்புதலை ரயில்வே வாரியம் விரைவில் வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது செயல்பாட்டுக்கு வந்தால், சென்னை மற்றும் சுற்றுவட்டார பயணிகளின் நெரிசலை குறைத்து, தெற்கு ரயில்வேக்கு புதிய உந்துசக்தியாக அமையும். வருவாயிலும் பயணியர் எண்ணிக்கையிலும் சாதனை படைத்துள்ள தெற்கு ரயில்வே, உண்மையில் நாட்டின் முதன்மை பிராந்தியங்களில் ஒன்றாக திகழ்கிறது. ஆனால் புதிய திட்டங்களின் விநியோகத்தில், குறிப்பாக தமிழ்நாட்டுக்கு ஒன்றிய அரசு சமமான அக்கறை காட்டவில்லை என்ற குற்றச்சாட்டு வலுப்பெறுகிறது.இதனால், ‘‘வருவாய் கொடுப்பதில் தமிழ்நாடு முதலிடம் ஆனால் வளர்ச்சித் திட்டங்களில் கடைசி இடமா?” என்ற கேள்வி எழுந்துள்ளது.