மதுரை: மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் வீ.ரமேஷ், கனகவேல் பாண்டியன் உள்ளிட்டோர், மதுரை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நேற்று அளித்த புகார் மனு: கரூர் தவெக கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த விவகாரத்தில் சமூக வலைதளங்களில் தொடர்ந்து பல்வேறு தரப்பினரும் பல்வேறு கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர். அவதூறான கருத்துகளையும் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் சமூக வலைதளங்களில் கருத்து பதிவிடுபவர்களை காவல்துறையினர் கைது செய்து வருகின்றனர்.
தவெக தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜூனா, தனது எக்ஸ் வலைதளத்தில் ‘‘எப்படி இலங்கையிலும், நேபாளத்திலும் இளைஞர்களும் ஜென்இசட் தலைமுறையும் ஒன்று கூடி அதிகாரத்திற்கு எதிராக புரட்சியை உருவாக்கி காட்டினார்களோ அதே போல் இங்கும் எழும்’’ என்றும் ‘‘ஆளுங்கட்சியின் அடிவருடிகளாக காவல்துறை மாறி போனால் மீட்சிக்கு புரட்சி தான் ஒரே வழி’’ என நேற்று பதிவிட்டிருந்தார். பின்னர் அதற்கு கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில் அந்த பதிவை திருத்தம் செய்தார்.
இந்நிலையில் ஆதவ் அர்ஜூனா தமிழ் நாட்டின் அமைதியை சீர்குலைக்கும் வகையிலும், கலவரத்தை தூண்டும் வகையிலும், அரசு மற்றும் காவல்துறைக்கு எதிராக அவதூறு பரப்பி பதிவிட்டுள்ளதால் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் ஆதவ் அர்ஜூனாவின் பதிவு சமூக வலைதளங்களில் வெளியாகிய நிலையில் அதன் மூலமாக பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே தவறான எண்ணம் தோன்றி அதன் மூலமாக அவர்களுக்குள்ளாகவே மோதல் ஏற்படும் நிலை உள்ளதால் பள்ளி, கல்லூரிகளை கண்காணிக்க வேண்டும். இவ்வாறு புகாரில் கூறியுள்ளனர்.