பொதுமக்களிடம் கருத்து கேட்காமல் கனிமங்களை எடுக்க அனுமதி வழங்குவதா? ஒன்றிய அரசுக்கு தலைவர்கள் கண்டனம்
சென்னை: கனிம வளங்களை அகழ்ந்து எடுக்க கருத்துகேட்பு கூட்டம் அவசியம் இல்லை என்ற ஒன்றிய அரசின் உத் தரவுக்கு தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
* அன்புமணி (பாமக தலைவர்): அணு கனிமங்கள் மற்றும் முக்கிய கனிம சுரங்கங்களை அமைக்க பொதுமக்களிடம் கருத்துக் கேட்கும் கூட்டங்களை நடத்த தேவையில்லை என்றும், இவற்றுக்கான சுற்றுச்சூழல் அனுமதியை இனி ஒன்றிய அரசே வழங்கும் என்ற ஆணையை ஒன்றிய அரசு உடனடியாக திரும்பப்பெற வேண்டும். மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் எந்த சுரங்கங்களையும் அமைக்கக் கூடாது.
* ஜவாஹிருல்லா (மமக தலைவர்): இந்தியாவில் இருக்கும் 24 வகை முக்கிய கனிமங்களையும் 6 வகையான அணு கனிமங்களையும் வெட்டி எடுப்பதற்கு மக்கள் கருத்துக்கேட்பு கூட்டம் நடந்த தேவை இல்லை என்று ஒன்றிய சுற்றுச்சூழல் அமைச்சகம் அறிவித்துள்ளது. மாநில அரசரின் உரிமையைப் பறிப்பதோடு சுற்றுச்சூழலுக்கும் பாதிப்பை உண்டாக்குகிற இந்த உத்தரவுக்கு எதிராக தமிழ்நாடு அரசு உடனடியாக நீதிமன்றத்தை நாட வேண்டும். ஒன்றிய அரசு இந்த உத்தரவை உடனடியாக திரும்பப் பெற வேண்டும்.
* நெல்லை முபாரக் (எஸ்டிபிஐ கட்சி தலைவர்): தற்போதைய பொது கருத்துகேட்பு ரத்து அறிவிப்பு, மக்களின் எதிர்ப்பை மீறி இத்திட்டம் தடையின்றி செயல்படுவதற்கு வழிவகுத்துள்ளது. இது மாநில அரசுகளின் உரிமைகளைப் பறிக்கும் நடவடிக்கை. கனிம வளங்களை ஒன்றிய அரசே ஏலம் விட்டு, அதற்கான அனுமதி வழங்கி, பொது கருத்து கேட்காமல் செயல்படுத்த அனுமதிப்பது என்பது மக்கள் விரோத நடவடிக்கை மட்டுமல்ல, கூட்டாட்சித் தத்துவத்திற்கும் எதிரானவை.
ஆகவே, ஒன்றிய அரசு இந்த முடிவை உடனடியாக திரும்பப் பெற வேண்டும். தமிழ்நாடு அரசு இதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர வேண்டும். அனைத்து ஜனநாயக சக்திகளும் இந்த முடிவுக்கு எதிராக குரல் எழுப்ப வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.