சென்னை: பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வு அட்டவணையை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சென்னையில் நேற்று வெளியிட்டார். அதன்படி பிளஸ் 2 தேர்வு மார்ச் 2ம் தேதியும், பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 11ம் தேதியும் தொடங்குகின்றன. இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியதாவது: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இயங்கும் பள்ளிகளில் பத்தாம் வகுப்பு, பிளஸ்2 வகுப்புகளில் படிக்கும் மாணவ, மாணவியருக்கான பொதுத் தேர்வு மார்ச் மாதம் தொடங்குகிறது.
அதன்படி பிளஸ் 2 தேர்வுகள் மார்ச் 2ம் தேதி தொடங்கி 26ம் தேதி வரையும், பிளஸ் 1 வகுப்பில் தோல்வியுற்றவர்களுக்கான தேர்வுகள் மார்ச் 3ம் தேதி முதல் 27ம் தேதி வரையும், பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 11ம் தேதி முதல் ஏப்ரல் 6ம் தேதியும் நடக்கிறது. முன்னதாக மேற்கண்ட வகுப்புகளுக்கான செய்முறைத் தேர்வுகளில் பிளஸ் 2 வகுப்புக்கு பிப்ரவரி 9ம் தேதி முதல் 14ம் தேதி வரையும், பிளஸ் 1 வகுப்புக்கு பிப்ரவரி 16ம் தேதி முதல் 21ம் தேதி வரையும், பத்தாம் வகுப்புக்கு பிப்ரவரி 23ம் தேதி முதல் 28ம் தேதி வரையும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
அதன் தொடர்ச்சியாக பிளஸ் 2 வகுப்புக்கான ரிசல்ட் மே 8ம் தேதியும், பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ்1 வகுப்புக்கான ரிசல்ட் மே 20ம் தேதியும், வெளியிடப்படும். பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 1, பிளஸ் 2 தேர்வுகள் காலை 10 மணிக்கு தொடங்கி மதியம் 1.15 மணி வரையில் நடக்கும். தமிழகம், புதுச்சேரியை சேர்ந்த 7513 பள்ளிகளில் பிளஸ் 2 வகுப்பு படிக்கும் 8 லட்சத்து 7 ஆயிரம் மாணவ, மாணவியர் பிளஸ் 2 பொதுத் தேர்வில் பங்கேற்கின்றனர். இவர்களுக்காக 3317 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
அதேபோல, பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 12 ஆயிரத்து 485 பள்ளிகளை சேர்ந்த 8 லட்சத்து 70 ஆயிரம் மாணவ, மாணவியர் பங்கேற்க இருக்கின்றனர். இவர்களுக்காக 4113 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த ஆண்டு பிளஸ் 1 தேர்வு ரத்து செய்யப்பட்டதை அடுத்து தோல்வியுற்றவர்களுக்காக மார்ச் 3ம் தேதி தேர்வு நடத்தப்படுகிறது. ஒவ்வொரு பாடத்துக்கும் இடைவெளி அளித்து அட்டவணை தயாரிக்கப்பட்டுள்ளது. பொதுத்தேர்வு அச்சத்தை நீக்கவே இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதனால் மாணவர்கள் உற்சாகம் பெற வேண்டும்.
தேர்வுகள் மூலம் உங்களை நீங்கள் வெளிப்படுத்த உள்ளீர்கள் என்பதை மனதில் வைத்து படிக்க வேண்டும். நேரமேலாண்மை முக்கியம். கடந்த 3 மாதத்தில் 38 மாவட்டங்களில் நான் பள்ளிகளில் ஆய்வு செய்ததில் ஆசிரியர்கள் ஊக்கப்படுத்தியதை பார்த்துள்ளோம். பொதுத் தேர்வு முடிந்த பிறகு கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டில் தேர்ச்சி வீதம் அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கிறோம். இந்த ஆண்டு முதன் முறையாக பிளஸ் 2 கணக்குப்பதிவியல் பாடத்தேர்வின்போது கால்குலேட்டர் பயன்படுத்த அனுமதிக்கப்பட்டுள்ளது.
மாற்றுத்திறன் கொண்டவர்களுக்கு வழங்கப்படும் சலுகைகள் இந்த ஆண்டும் தொடரும். இன்று முதல் மாணவர்கள் திட்டமிடலுடன் தேர்வை எதிர்கொள்ள வேண்டும். தேர்தல் வருவதை அடுத்து அதுகுறித்து தேர்தல் ஆணையத்திடம் விசாரித்து தேர்வு அட்டவணை தயாரிக்கப்பட்டுள்ளது. தற்போது 38 மாவட்டத்துக்கும் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள், மாவட்ட கல்வி அலுவலர்கள் காலியில்லை என்ற வகையில் பணிநியமனங்கள் செய்யப்பட்டுள்ளன. பெரும்பாலும் அனுபவம் மிக்கவர்கள் இந்த பணியில் இருப்பார்கள்.
தேர்வுக்கு வராதவர்கள் எண்ணிக்கை தற்போது குறைக்கப்பட்டுள்ளது. இந்த முறை அதிக அளவில் தவறாமல் தேர்வு எழுத வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விடுபட்ட சான்றுகள் விரைவில் பெறுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. சான்று சரிபார்ப்பில் 1 லட்சத்துக்கும் மேற்பட்டவர்களுக்கும், மாற்று சான்றுகள் 10 ஆயிரம் பேருக்கும் வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார்.
* 10ம் வகுப்பு அட்டவணை
தேதி பாடங்கள்
மார்ச் 11 - தமிழ் மற்றும் இதர மொழிப்பாடங்கள்
மார்ச் 16 - ஆங்கிலம்
மார்ச் 25 - கணக்கு
மார்ச் 30 - அறிவியல்
ஏப்ரல் 2 - சமூக அறிவியல்
ஏப்ரல் 6 - விருப்ப மொழிப்பாடங்கள்
* பிளஸ் 1 தேர்வு அட்டவணை
தேதி பாடங்கள்
மார்ச் 3 - தமிழ் மற்றும் இதர பாடங்கள்
மார்ச் 6 - ஆங்கிலம்
மார்ச் 10 - வேதியியல், கணக்குப்பதிவியல், புவியியல்
மார்ச் 12 - தொடர்பு ஆங்கிலம், இந்தியப் பண்பாடு மற்றும் நெறியியல், கணினிஅறிவியல்,கணினிப் பயன்பாடு, உயிரி வேதியியல், சிறப்பு தமிழ், மனையியல்,அரசியல் அறிவியல், புள்ளியியல், நர்சிங், அடிப்படை மின்பொறியியல்
மார்ச் 18 - இயற்பியல், பொருளியல், வேலைவாய்ப்புத் திறன்
மார்ச் 24 - கணக்கு, விலங்கியல், வணிகவியல், சத்துணவு மற்றும் தொழில் பாடங்கள்
மார்ச் 27 - உயிரியல், தாவரவியல், வரலாறு, வணிகக் கணிதம் மற்றும் புள்ளியியல், தொழில் பாடங்கள்
* பிளஸ்2 அட்டவணை
தேதி பாடங்கள்
மார்ச் 2 - தமிழ் மற்றும் இதர மொழிப்பாடங்கள்.
மார்ச் 5 - ஆங்கிலம்
மார்ச் 9 - வேதியியல், கணக்குப்பதிவியல், புவியியல்
மார்ச் 13 - இயற்பியல், பொருளியல், வேலை வாய்ப்பு திறன்
மார்ச் 17 - கணக்கு, விலங்கியல், நுண்ணுயிரியல், சத்துணவு மற்றும் தொழில் பாடங்கள்
மார்ச் 23 - உயிரியல், தாவரவியல், வணிகவியல், மற்றும் தொழில் பாடங்கள்
மார்ச் 26 -தொடர்பு ஆங்கிலம், இந்தியப் பண்பாடு மற்றும் நெறியியல், வரலாறு, மற்றும் தொழில் பாடங்கள்
