பொதுமக்கள் மீது தாக்குதல்; ஏட்டுகளுக்கு அரிவாள் வெட்டு தப்ப முயன்ற ரவுடி கும்பல் மீது போலீசார் துப்பாக்கி சூடு: 2 பேருக்கு கை, கால் முறிவு
விருத்தாசலம்: ரகளை செய்தவர்களை பிடிக்க முயன்ற ஏட்டுகளை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பி ஓட முயன்ற ரவுடிகள் மீது போலீசார் துப்பாக்கி சூடு நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடலூர் மாவட்டம் நெய்வேலி திடீர் குப்பத்தை சேர்ந்தவர் கார்த்திக் (25). கட்டிட தொழிலாளி. இவர் விருத்தாசலம் பழமலைநாதர் நகரில் உள்ள சகோதரி வீட்டில் தங்கி, அப்பகுதியில் நடைபெறும் புதிய திருமண மண்டப கட்டுமான பணிகளை கவனித்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு கட்டுமான பணி நடைபெறும் இடத்தில் கார்த்திக் தங்கியிருந்தார். நேற்று அதிகாலை 4 மணியளவில் சந்தேகத்துக்கிடமாக போதையில் 3 இளைஞர்கள் அங்கு நின்றிருந்தனர்.
அவர்களிடம் விசாரித்தபோது 2 பேர் அவரை, இரும்பு கம்பி மற்றும் கட்டையால் தாக்கி முட்டி போட வைத்ததுடன், மற்றொருவர் கார்த்திக் கழுத்தில் கத்தியை வைத்து கொலை மிரட்டல் விடுத்து, செல்போனில் வீடியோ எடுத்துள்ளனர்.
கார்த்திக் அவர்களை தள்ளியபடி கூச்சலிட போதை கும்பல் தப்பி ஓடியது. அக்கம்பக்கத்தினர் கார்த்திக்கை மீட்டு விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்சில் அனுப்பி வைத்தனர். சிறிது நேரத்தில் மீண்டும் அங்கு வந்த 3 பேர் கும்பல், ஆம்புலன்சை பின்தொடர்ந்தது. அவர்களை மருத்துவமனைக்குள் விடாமல் காவலாளிகள் தடுத்த நிலையில் அங்கும் ரகளையில் ஈடுபட்டனர்.
பின்னர் அருகிலிருந்த பெட்டிக் கடையில் இருந்த பொருட்களை சேதப்படுத்திய 3 பேரும், அதை தட்டிக்கேட்ட உரிமையாளரான சுந்தரமூர்த்தியை தாக்கினர். இதை தடுக்க வந்த மற்றொரு வியாபாரி ராஜேந்திரனையும் (38) தாக்கி அவரது கடையையும் சூறையாடினர். பின்னர், விருத்தாசலம் ரயில்வே மேம்பாலம் அருகே வந்த அரசு பேருந்தை வழிமறித்து ஏறி ஓட்டுனர் கணேசன் (59) என்பவரையும் தாக்கி அவரது தலையில், பீர் பாட்டிலை உடைத்து காயப்படுத்தி விட்டு தப்பினர். அவர் விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
போதை கும்பலின் அடுத்தடுத்த ரகளை சம்பவங்கள் குறித்து தகவல் கிடைக்கவே, விருத்தாசலம் காவல்துறையினர் அங்கு வந்து, பயணிகளை இறக்கி மாற்றுப் பேருந்தில் அனுப்பி வைத்தனர். விசாரணையில் தொடர் ரகளையில் ஈடுபட்டது விருத்தாசலம் பழமலை நாதர் நகரைச் சேர்ந்த கந்தவேல் (21) மற்றும் சிவா என்கிற விக்னேஷ் (21), பாலாஜி ஆகியோர் என்பதும், மேற்கண்ட சம்பவங்களை போதை கும்பல் ரீல்ஸ் ஆக இன்ஸ்டாகிராமில் வெளியிட்டதும் தெரியவந்தது. இதையடுத்து கடலூர் மாவட்ட எஸ்பி ஜெயக்குமார் உத்தரவின்பேரில், விருத்தாசலம் போலீசார் தனிப்படை அமைத்து தீவிர தேடுதலில் ஈடுபட்டனர்.
அப்போது சின்னகண்டியங்குப்பம் பகுதி முந்திரி காட்டில் போதை கும்பலைச் சேர்ந்த 3 பேரும் பதுங்கியது தெரியவே அங்கு விரைந்த தனிப்படையினர் அவர்களை மடக்கிப் பிடிக்க முயன்றனர். அப்போது அக்கும்பல், தலைமை காவலர்கள் வீரமணி மற்றும் வேல்முருகன் ஆகியோரை கையில் அரிவாளால் வெட்டிவிட்டு தப்பி ஓட முயன்றனர். இதனால், தற்காப்புக்காக எஸ்.ஐ.சந்துரு துப்பாக்கியால் சுட்டதில் கந்தவேலுக்கு வலதுகாலில் குண்டு பாய்ந்து கீழே விழுந்ததில், இடது கை முறிந்தது.
மேலும் சிவா என்ற விக்னேஷூக்கு வலது கை மற்றும் இடது காலில் முறிவு ஏற்படவே, இருவரையும் காயங்களுடன் பிடித்த போலீசார் விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். கும்பலின் தாக்குதலில் காயமடைந்த ஏட்டுகள் வீரமணி மற்றும் வேல்முருகனும் அங்கேயே சேர்க்கப்பட்டுள்ளனர். தப்பி ஓடிய பாலாஜியை தனிப்படையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். போலீஸ் வசம் சிக்கிய கந்தவேலு மீது விருத்தாசலத்தில் 4, கோயம்பேட்டில் 3 அடிதடி வழக்குகள் மற்றும் சிவா மீது வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரியவந்தது.