பொது இடங்களில் கொடிக்கம்பங்களை அகற்ற வேண்டும் என்ற உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்த உச்சநீதிமன்றம்..!!
டெல்லி : கொடிக்கம்பங்களை அகற்ற வேண்டும் என்ற உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது உத்தரவிட்டுள்ளது. தமிழகம் முழுவதும் பொது இடங்கள், மாநில, தேசிய நெடுஞ்சாலைகள், உள்ளாட்சிக்கு சொந்தமான இடங்களில் அனுமதியின்றி வைக்கப்பட்டு உள்ள அரசியல் கட்சிகள், சாதி, மத அமைப்புகள் மற்றும் சங்கங்களின் கொடிக் கம்பங்களை 12 வாரங்களில் அகற்ற வேண்டும் என ஐகோர்ட் மதுரை கிளை கடந்த ஜனவரி மாதம் 27ம் தேதி உத்தரவிட்டிருந்தார்.
மேலும், சாலைகளிலும், தெருக்களிலும் பொது இடத்தை ஆக்கிரமித்து கட்சிக் கொடிக் கம்பங்கள் நடப்பட்டுள்ளதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுவதுடன், சாலையை பயன்படுத்துவோருக்கு பல்வேறு சிரமங்களும் ஏற்படுகின்றன எனக் கூறியுள்ள நீதிமன்றம், கட்சித் தலைவர்கள், சமுதாயத் தலைவர்களின் பிறந்தநாள், நினைவு நாளின்போது கொடிக் கம்பம் அமைந்துள்ள பகுதி முழுவதுமாக ஆக்கிரமிக்கப்படுகிறது என்றும் யார் எவ்வளவு உயரத்தில் கொடிக் கம்பங்கள் அமைப்பது என்பதில் அரசியல் கட்சிகளிடம் போட்டிகள் ஏற்படுகின்றன எனவும் குறிப்பிட்டனர்.
இந்நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் சண்முகம் சார்பில் தங்கள் கட்சி கொடியை அகற்றுவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று சென்னை உயநீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்து இருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், சவுந்தர், விஜயகுமார் ஆகியோர் அடங்கிய அமர்வு தனி நீதிபதியின் உத்தரவை உறுதி செய்து தீர்ப்பளித்தது.
இதை தொடர்ந்து இந்த உத்தரவுக்கு எதிராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழங்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழகத்தில் கொடிக் கம்பங்களை அகற்ற வேண்டும் என்ற உயர்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. மேலும், மேல்முறையீட்டு மனு தொடர்பாக பதில் அளிக்க தமிழ்நாடு அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி வழக்கை ஒத்திவைத்தது.