Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

பொது விநியோக திட்டத்தில் தமிழ்நாடு முழுவதும் 37,328 நியாயவிலை கடைகள்

சென்னை: பொதுவிநியோகத் திட்டத்தில் தமிழ்நாடு முழுவதும் 37,328 நியாயவிலைக் கடைகள் உள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

முதல்வர் மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றபோது கொரோனா தொற்று பரவி உலகம் முழுவதும் உயிர்ப் பலிகள் வாங்கிக் கொண்டிருந்தது. அப்போது முதலமைச்சர் பொது விநியோகத் திட்டத்தின் மூலம் எல்லோருக்கும் தடையின்றி உணவுப் பொருள்கள் வழங்கிட உத்தரவிட்டார். அதன்படி, 2022ம் ஆண்டில், 2,07,70,726 அரிசி அட்டைதாரர்களுக்கு, 14 மளிகைப் பொருள்கள் அடங்கிய கொரோனா நிவாரணத் தொகுப்பு வழங்கப்பட்டது. ரூ.4000 நிவாரண உதவித் தொகை வழங்கப்பட்டது.

நியாயவிலைக் கடைகளுக்கு ஐஎஸ்ஓ தரச்சான்றிதழ் : தரம் மற்றும் பராமரிப்புக்காக 10,149 நியாய விலைக் கடைகளுக்கு ஐஎஸ்ஓ:9001 சான்றிதழும், பாதுகாப்பான உணவுச் சங்கிலி மற்றும் சேமிப்பிற்கான, 2,059 நியாய விலைக் கடைகளுக்கு ஐஎஸ்ஓ:28000 சான்றிதழும் பெறப்பட்டுள்ளன. இதுவரை 5,481 நியாயவிலைக் கடைகள் புதுப்பிக்கப்பட்டுள்ளன.

தமிழ்நாட்டில் செயல்படும் நியாயவிலைக் கடைகள் : கூட்டுறவு துறையின் கீழ் 35,181 நியாயவிலைக்கடைகளும், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் கீழ் 1527 நியாயவிலைக்கடைகளும், இதர கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் 152 நியாயவிலைக்கடைகளும், மகளிர் சுய உதவி குழுக்கள் மூலம் 468 நியாயவிலைக்கடைகளும், என மொத்தம் 37,328 நியாயவிலைக்கடைகள் தமிழ்நாடு முழுவதிலும் செயல்படுகின்றன. இவற்றுள் 26,618 நியாயவிலைக்கடைகள், முழுநேரமும் செயல்படுகின்றன. 10,710 நியாயவிலைக்கடைகள், பகுதி நேரக் கடைகளாகச் செயல்படுகின்றன.

இந்த நியாயவிலைக் கடைகள் வாயிலாக மொத்தம் 2 கோடியே 25 லட்சத்து 93 ஆயிரத்து 654 மின்னணு குடும்ப அட்டைகளுக்கு உணவுப் பொருள்கள் வழங்கப்படுகின்றன. இவற்றுள் 21,337 நியாயவிலைக்கடைகள், சொந்தக் கட்டடங்களிலும் 8,725 நியாயவிலைக்கடைகள் வாடகையில்லாக் கட்டடங்களிலும் 7,266 நியாயவிலைக்கடைகள் வாடகைக் கட்டடங்களிலும் செயல்படுகின்றன. தனியார் வாடகை கட்டடங்களில் செயல்படும் நியாயவிலைக்கடைகளுக்குச் சொந்தக் கட்டிடங்கள் கட்டுவதற்கு அரசு தொடர்ந்து நடவடிக்கை மேற்கொண்டு

வருகிறது.

மேற்கூரை அமைப்புடன் கூடிய நெல் சேமிப்புத் தளங்கள் : மேற்கூரை அமைப்புடன் கூடிய நெல் சேமிப்புத் தளங்கள் கட்டுவதற்குத் திட்டமிடப்பட்டு 31.3.2025 வரை, ரூ. 294.70 கோடியில் 3.63 லட்சம் மெட்ரிக் டன் சேமிப்புத் திறன் கொண்ட 23 நெல் சேமிப்பு தளங்கள் கட்டப்பட்டுள்ளன. மேலும் 40,500 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட சேமிப்புத் தளங்களின் கட்டுமானப் பணிகள் ரூ. 36.38 கோடி மதிப்பீட்டில் நடைபெறுகின்றன.

2394 புதிய நியாயவிலைக் கடைகள் : பொதுமக்கள் எளிதாகக் கடைகளுக்குச் சென்று பொருள்களை வாங்கிப் பயன்படுத்திட வேண்டும் என விரும்பினார்கள். அதனால் அவர்கள் வசிக்கும் இடங்களின் அருகிலேயே பொது விநியோகக் கடைகள் அமைய வேண்டும் என்பதற்காக 4 ஆண்டுகளில் மக்கள் வாழும் பகுதிகளில் 789 முழு நேரக் கடைகளும், 1605 பகுதி நேரக் கடைகளும், ஆக மொத்தம் 2394 புதிய நியாயவிலைக் கடைகளைத் திறந்து வைத்துள்ளார்கள்.

ரொக்கமில்லாப் பணப்பரிவர்த்தனை: ரொக்கமில்லாப் பணப்பரிவர்த்தனையின் முக்கியத்துவத்தைக் கருத்தில்கொண்டு, கூட்டுறவு நியாயவிலைக் கடைகளில் யூபிஐ முறையைப் பயன்படுத்தி ரொக்கமில்லாப் பணப்பரிவர்த்தனை முறையை அறிமுகப்படுத்த உத்தரவிட்டார்கள். இதுவரை, 10,661 நியாய விலைக் கடைகளில் யூபிஐ முறையைப் பயன்படுத்தி ரொக்கமில்லாப் பணப்பரிவர்த்தனை நடைபெறும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

பெஞ்சல் புயல் நிவாரணப் பணி : விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளில் 26.11.2024 முதல் வீசிய பெஞ்சல் புயலின் காரணமாக அதிகம் பாதிக்கபட்ட வெள்ள நீர் சூழ்ந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி நிவாரணமாக 5 கிலோ அரிசி பைகள், 1 கிலோ பருப்பு, 1 கிலோ சர்க்கரை ஆகியவை 7 லட்சம் குடும்பங்களுக்கு வழங்கப்பட்டன.

பொங்கல் தொகுப்புகள் : 2022ம் ஆண்டில் 2,15,67,122 அரிசி அட்டைதாரர்களுக்கும், இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கும், 20 பொருட்கள், ஒரு முழு கரும்பு அடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்புகள் வழங்கப்பட்டன.

2023ம் ஆண்டில் 2,19,33,342 அரிசி அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கு தலா ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு கரும்பு ரூ.1000 ரொக்கம் அடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்புகள் வழங்கப்பட்டன. அதேபோல, 2024ம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு கரும்பு, ரூ.1,000 ரொக்கம் அடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பு 2,19,51,748 அரிசி அட்டைதாரர்களுக்கும், இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கும் நியாயவிலைக்கடைகள் மூலம் வழங்கப்பட்டன.

2025ம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழு கரும்பு அடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பு 1,94,35,771 அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும், இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கும் நியாயவிலைக்கடைகள் மூலம் வழங்கப்பட்டன. கூட்டுறவுத் துறையின் கீழ் செயல்படும் உணவுப் பொருள் வழங்கும் கடைகள் மூலம் தமிழ்நாட்டு மக்களுக்கு அனைத்து அத்தியாவசியப் பொருள்களையும் உரிய நேரத்தில் வழங்கி, ஏழை எளிய மக்களின் வறுமையை நீக்கி வறுமை ஒழிப்பில் தமிழ்நாடு இந்தியாவில் முதலிடம் என்னும் பெருமையை நிலைநாட்டி உள்ளார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.