Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

ஒலிம்பிக் சங்க தலைவர் பி.டி.உஷா தனக்கு ஆதரவு அளிக்கவில்லை: மல்யுத்த வீராங்கனை பரபரப்பு குற்றச்சாட்டு

டெல்லி: ஒலிம்பிக் சங்க தலைவர் பி.டி.உஷா தனக்கு ஆதரவு அளிக்கவில்லை என மல்யுத்த வீராங்கனை பரபரப்பு குற்றச்சாட்டு வைத்துள்ளார். பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் நடந்த ஒலிம்பிக் மல்யுத்த போட்டியில் 53 கிலோ எடைப்பிரிவில் இறுதிப் போட்டிக்கு இந்திய வீராங்கனை வினேஷ் போகத் முன்னேறினார்.

ஆனால் இறுதி போட்டி நடைபெறுவதற்கு முன்னதாக 100 கிராம் எடை கூடுதலாக இருந்ததாக வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதனை எதிர்த்து சர்வதேச தீர்ப்பாயத்திலும் அவர் தொடர்ந்த மேல்முறையீடும் தள்ளுபடி செய்யப்பட்டது. தகுதி நீக்கம் செய்யப்பட்ட நிலையில் உடல்நலக்குறைவு காரணமாக வினேஷ் போகத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அப்போது, அவரை சந்தித்த இந்திய தடகள சங்கத் தலைவர் பி.டி. உஷா அவருக்கு ஆறுதல் கூறினார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தையும் அவர் வெளியிட்டார். மேலும், வினேஷ் போகத்திற்கு அனைத்து உதவிகளும் செய்யப்படும் எனக் கூறியிருந்தார். இந்த நிலையில் தன்னுடைய அனுமதி இல்லாமல் பி.டி. உஷா படம் எடுத்து வெளியிட்டுள்ளார் என குற்றம்சாட்டியுள்ளார்.

இது குறித்து வினேஷ் போகத் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், மருத்துவமனையில் இருந்தபோது தனது ஒப்புதல் இன்றி பி.டி.உஷா போட்டோ எடுத்துக்கொண்டார். பி.டி.உஷா தன்னுடன் வெறும் போட்டோ மட்டுமே எடுத்துக்கொண்டார், உண்மையில் உறுதுணையாக இல்லை.பாரீஸ் நகரில் எனக்கு என்ன ஆதரவு கிடைத்தது என தெரியவில்லை. மல்யுத்தத்தை கைவிட வேண்டாம் என்று பலரும் கூறினர். எதற்காக மல்யுத்தத்தை நான் தொடர வேண்டும். எல்லா இடங்களிலும் அரசியல் உள்ளது.

நான் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தபோது வெளியில் என்ன நடந்ததென்று எனக்குத் தெரியவில்லை.வாழ்வில் மிகவும் கடினமான கட்டத்தை நான் கடந்து கொண்டிருந்தேன். அப்போது, பி.டி.உஷா எனக்கு ஆதரவு தருவதுபோல என் அனுமதியில்லாமல் புகைப்படம் எடுத்து சோஷியல் மீடியாக்களில் பகிர்ந்து நான் உங்களுடன் இருக்கிறேன் என்று தெரிவித்துள்ளார். இதுபோன்றுதான் ஒருவர் ஆதரவு தருவார்களா. இது முழுக்க முழுக்க அரசியல். முறையான நடவடிக்கை இல்லை. வெறும் நடிப்பு என்று தெரிவித்துள்ளார்.