கதையளக்கும் மனநோயாளியாக மாறி வருகிறார் சீமான் அண்ணாவின் பெருமை குறித்து தற்குறிகளுக்கு எப்படி தெரியும்: திமுக மாணவர் அணி செயலாளர் கடும் தாக்கு
சென்னை: கதையளக்கும் மனநோயாளியாக மாறி வருகிறார் சீமான் என்று திமுக மாணவர் அணி செயலாளர் ராஜீவ்காந்தி குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை: பேரறிஞர் அண்ணாவையும், முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரையும் நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான், தரந்தாழ்த்து வாய்த்துடுக்காகப் பேசி இருப்பது அநாகரிகத்தின் உச்சம்; கடும் கண்டனத்துக்கு உரியது. 1956ம் ஆண்டு மதுரை மீனாட்சி அம்மன் ஆலய தமிழ் மாநாட்டில் நடக்காத விஷயத்தைச் சொல்லி அண்ணாவை பாஜவின் அண்ணாமலை விமர்சித்தார். அவரின் வழித்தோன்றலாக பாஜவின் பி டீமாக செயல்பட்டுக் கொண்டிருக்கும் சீமான், அதே வழியில் அண்ணாவை கடும் சொற்களால் விமர்சித்திருக்கிறார்.
வாய்க்கு வந்ததையெல்லாம் அடித்துவிடும் சீமான், தனக்கு முன் இருப்பவர்கள் எல்லாம் முட்டாள்கள் என்ற எண்ணத்திலேயே கதையளக்கும் மனநோயாளியாக மாறி வருகிறார். தமிழ்நாட்டு மக்களைத் தலைநிமிரச் செய்தவர் அண்ணா. அவரது பெருமை சீமான் போன்ற தற்குறிகளுக்கு எப்படி தெரியும்? தமிழ்நாட்டில் தற்போது ஒரு மோசமான அரசியல் உருவாகிக் கொண்டிருக்கிறது. கூட்டம் கூடினால் என்ன வேண்டுமானாலும் பேசலாம் என்று சில அரசியல் அரைவேக்காடுகள் நினைத்துக் கொள்கின்றன. நாக்கை வைத்து அரசியல்தான் நடத்துவார்கள். ஆனால், சீமானோ அந்த நாக்கை வைத்து வியாபாரம் செய்து கொண்டிருக்கிறார். அண்ணா மீது இனி ஓர் அவதூறு சொல் வீசப்பட்டாலும், மானமுள்ள தமிழ்நாட்டு மக்கள் மற்றும் திமுக தொண்டர்களின் கோபக் கனலுக்கு ஆளாக நேரிடும்.