தேசிய சட்டப்பல்கலை பதிவாளரின் உத்தரவை திரும்ப பெற வேண்டும்: அமைச்சர் துரைமுருகனிடம் பெ.சண்முகம் வலியுறுத்தல்
சென்னை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம், தமிழக சட்டத்துறை அமைச்சர் துரைமுருகனை அவரது அலுவலகத்தில் நேற்று நேரில் சந்தித்து பேசினார். அப்போது, ‘தமிழ்நாடு தேசிய சட்டப் பல்கலைக்கழக பதிவாளர் கடந்த 8ம்தேதி மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும் பாதகம் விளைவிக்கும் வகையில் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையை உடனடியாக திரும்பப் பெற வேண்டுமென வலியுறுத்தினார்.
குறிப்பாக, ஏற்கனவே பல்கலைக்கழகத்தில் படித்துக் கொண்டிருக்கும் மாணவர்கள் உள்பட அனைத்து மாணவர்களும் கண்டிப்பாக பெற்றோருடன் வர வேண்டும், இரண்டாம் ஆண்டு முதல் 5ம் ஆண்டு வரை படிக்கும் மாணவர்கள் உள்பட புதிதாக சேர்க்கை அவசியம், மாணவர்கள் அனைவருக்கும் உள்ளூர் பாதுகாவலரின் முகவரி அவசியம், மொத்த கட்டணத்தையும் ஒரே தவணையில் செலுத்த வேண்டும் உள்ளிட்ட மாணவர்களுக்கு பாதகமான பல்வேறு உத்தரவுகள் அந்த சுற்றறிக்கையில் இருப்பதை சுட்டிக்காட்டினார்.இதை கேட்ட அமைச்சர் துரைமுருகன், இது சம்பந்தமாக பதிவாளரை அழைத்து உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.