சென்னை: உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன் வெளியிட்ட அறிவிப்பு விவரம்: அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் காலியாக உள்ள இடங்களில் நிரந்தர ஆசிரியர்களை உடனே பணியமர்த்த இயலாத நிலை உள்ளது. எனினும், மாணவர்கள் கற்றலில் தொய்வு ஏற்படாமல் இருக்க ஏற்கெனவே 516 கவுரவ விரிவுரையாளர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். தொடர்ந்து இன்னும் 881 கவுரவ விரிவுரையாளர்களை தற்காலிகமாக பணியமர்த்த தற்போது முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து தகுதியான பட்டதாரிகள் www.tngasa.org என்ற இணையதளம் வழியாக வரும் அக்டோபர் 8-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். ஏற்கெனவே கவுரவ விரிவுரையாளர் பணிக்கு விண்ணப்பித்தவர்கள் தற்போது விண்ணப்பிக்கும் போது, தங்களின் விண்ணப்ப எண்களை பதிவு செய்து கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு பெறலாம். கல்வித்தகுதி மற்றும் நேர்முகத் தேர்வு மதிப்பீடுகளின் அடிப்படையிலும் கவுரவ விரிவுரையாளர்கள் தேர்வு செய்யப்படுவர். இதுகுறித்த கூடுதல் விவரங்களை மேற்கண்ட வலைத்தளத்தில் அறிந்து கொள்ளலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.