Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

வருங்கால வைப்பு நிதி பணம் 100% வரை இனி எடுக்கலாம்: ஒன்றிய அரசு ஒப்புதல்

புதுடெல்லி: தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியில் உள்ள பணத்தை 100 % வரை ஊழியர்கள் இனி எடுக்கும் ஒன்றிய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி(ஈபிஎப்ஓ) அமைப்பின் மத்திய அறங்காவலர்கள் குழு கூட்டம் ஒன்றிய தொழிலாளர் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தலைமையில் நேற்று நடந்தது. இந்த கூட்டத்தில் பகுதி தாராளமயமாக்கப்பட்ட பகுதி நேர திரும்ப பெறுதல் உள்ளிட்ட பல புரட்சிகரமான முடிவுகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் உறுப்பினர்கள் தகுதியான நிலுவை தொகையில் 100 % வரை திரும்ப பெற முடியும்.

இதுகுறித்து ஒன்றிய தொழிலாளர் நலத்துறை வெளியிட்டுள்ள அறிக்கை: தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியில்(இபிஎப்) உள்ள உறுப்பினர்களின் வாழ்க்கை அமைப்பை மேம்படுத்துவதற்காக பிஎப் திட்டத்தில் இருந்து பகுதியளவு பணம் எடுப்பதற்கான விதிகளை எளிமைப்படுத்துவதற்கு முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மிக சிக்கலான 13 விதிகளை ஒன்றிணைத்த, அத்தியாவசிய தேவைகள் (நோய், கல்வி,திருமணம்), வீட்டு தேவைகள் மற்றும் சிறப்பு சூழ்நிலைகள் என மூன்று வகைகளாக வகைப்படுத்தப்பட்ட ஒற்றை, நெறிப்படுத்தப்பட்ட விதியாக மாற்றப்பட்டுள்ளது. இனி,​​உறுப்பினர்கள் வருங்கால வைப்பு நிதியில் உள்ள தகுதியான இருப்புத் தொகையில் 100 % வரை திரும்பப் பெற முடியும்.

இதில் பணியாளர் மற்றும் முதலாளியின் பங்கும் அடங்கும். பணம் எடுப்பதற்கான வரம்புகள் தாராளமயமாக்கப்பட்டுள்ளன. திருமணம் மற்றும் கல்விக்காக பகுதி பணம் எடுக்க மொத்தம் 3 முறை அனுமதிக்கப்பட்டிருந்தது. இனி, கல்விக்கு 10 முறை வரையிலும், திருமணத்திற்கு 5 முறை வரையிலும் பணம் எடுக்க முடியும். அனைத்து பகுதி திரும்பப் பெறுதல்களுக்கும் குறைந்தபட்ச சேவைக்கான தேவை 12 மாதங்கள் மட்டுமே என ஒரே மாதிரியாகக் குறைக்கப்பட்டுள்ளது. முன்பு, பகுதி பணத்தை திரும்பப் பெறுவதற்கு, இயற்கை பேரிடர், நிறுவனங்கள் கதவடைப்பு, தொடர்ச்சியான வேலையின்மை,தொற்றுநோய் பரவல் போன்ற காரணங்களை உறுப்பினர் குறிப்பிட வேண்டியிருந்தது.

இனி, ​​உறுப்பினர் இந்தப் பிரிவின் கீழ் எந்த காரணங்களையும் கூறாமல் விண்ணப்பிக்கலாம். உறுப்பினர்களின் கணக்கில் செலுத்தப்படும் பங்களிப்புகளில் 25 சதவீதத்தை, உறுப்பினர் எப்போதும் பராமரிக்க வேண்டிய குறைந்தபட்ச இருப்பாக வைத்திருப்பதற்கான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பகுதியளவு பணத்தைத் திரும்பப் பெறுவதை தாராளமயமாக்குவது, உறுப்பினர்கள் தங்கள் ஓய்வூதிய சேமிப்பு அல்லது ஓய்வூதிய உரிமைகளை சமரசம் செய்யாமல் உடனடி நிதித் தேவைகளைப் பூர்த்தி செய்ய முடியும் என்பதை உறுதி செய்கிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.