திமுக அரசு பொறுப்பேற்ற நாளில் இருந்தே வேளாண்மை வளர்ச்சியில் தனிக்கவனம் செலுத்தி வருகிறது. முன்னாள் முதல்வர் கலைஞர் ஆட்சிக்காலத்திலும் சரி, இப்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆட்சிக்காலத்திலும் சரி, தமிழக விவசாயிகளுக்கு நல்ல பலத்திட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. திராவிட மாடல் ஆட்சி பொறுப்பேற்றவுடன், இதுநாள் வரை இல்லாத அளவுக்கு வேளாண் வளர்ச்சியை எட்டிட நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் வேளாண் துறைக்கென தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.
தேர்தல் அறிக்கையில் திமுக அறிவித்தப்படி ரூ. 12 ஆயிரத்து 110 கோடி மதிப்பிலான பயிர் கடன் தள்ளுபடி செய்யப்பட்டது. தமிழக கூட்டுறவு சங்கங்களில் சிறு, குறு விவசாயிகள் பெற்றிருந்த பயிர்கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டதோடு, விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில் பயிர்கடன்களை குறிப்பிட்ட காலத்திற்குள் செலுத்தும் விவசாயிகளுக்கு வட்டியை அரசே செலுத்தி வருகிறது.
இந்நிலையில் தற்பாது இந்தியாவே திரும்பி பார்க்கும் வகையில் இணைய வழி பயிர்கடன் திட்டத்தை தமிழக அரசு அறிமுகம் செய்துள்ளது. தர்மபுரி அதியமான்கோட்டை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் இணைய வழியில் விண்ணப்பித்த அன்றே பயிர்கடன் வழங்கும் திட்டத்தை நேற்று தமிழக முதல்வர் தொடங்கி வைத்தார். இத்திட்டத்தின் கீழ் விவசாயிகள் பயிர்கடன் வாங்கிட கூட்டுறவு வங்கிக்கு நேரில் வர வேண்டிய அவசியம் இல்லை.
இதுநாள் விவசாயிகள் விண்ணப்பித்த 7வது நாளில் கடன் வழங்கப்பட்டு வந்தது. இனி வரும் காலங்களில் விவசாயிகள் மின்னணு விவசாய கடன் திட்டத்தின் கீழ் இ-சேவை மையத்தில் இருந்து கூட்டுறவு வங்கிக்கு விண்ணப்பித்தால் போதும். விவசாயிகளின் வங்கி கணக்கில் பயிர்கடன் அன்றே ஏறிவிடும். இந்தியாவிலே முதல்முறையாக தமிழகத்தில் தொடங்கப்பட்டுள்ள இத்திட்டத்திற்கு விவசாயிகள் மத்தியில் நல்ல வரவேற்பு காணப்படுகிறது.
இத்திட்டத்தின் கீழ் விவசாயிகள் அதிகபட்சமாக ரூ.3 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை கடன் பெறலாம் என்பதால், வேளாண்மை செலவுகளுக்கு எளிதில் பணம் கிட்டிடும். விவசாயிகள் பயிர்கடன் விஷயத்தில் தேவையற்ற காலதாமதத்தை தவிர்ப்பதோடு, நம்பிக்கையோடு விண்ணப்பித்துவிட்டு வேளாண் பணிகளை தொடங்க இயலும். தமிழக அரசு செயல்படுத்த உள்ள இத்தகைய திட்டங்களால் மாநிலத்தில் வேளாண் வளர்ச்சியும் அதிகரித்து வருகிறது.
கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் 1.36 சதவீதமாக இருந்த வேளாண் வளர்ச்சி, இப்போது 5.66 சதவீதமாக வளர்ந்துள்ளது. திமுக அரசு கடந்த 4 ஆண்டுகளில் கொண்டு வந்த வேளாண்மை வளர்ச்சி திட்டங்களால் கொய்யா, கேழ்வரகு உற்பத்தியில் தமிழ்நாடு முதல் இடத்தை எட்டியுள்ளது. கலைஞரின் ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சி திட்டத்தில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிராமங்களில் 47 ஆயிரத்து 286 ஏக்கர் தரிசு நிலங்கள் மீண்டும் சாகுபடி நிலமாக மாற்றப்பட்டுள்ளன.
வேளாண்மைத்துறையின் இயந்திரமயமாக்கல் கடந்த காலங்களில் இல்லாத அளவுக்கு நவீனமாக்கப்பட்ட நிலையில், புதிய வேளாண்மை இயந்திரங்கள் கொள்முதல் செய்யப்பட்டு, இ-வாடகை சேவை மையங்கள் மூலம் சுமார் 70 ஆயிரம் விவசாயிகள் பயன் அடைந்து வருகின்றனர். வேளாண் சந்தைகள், ஒழுங்குமுறை விற்பனை கூடங்கள் ஆகியவற்றில் திமுக அரசு கொண்டு வந்த சீர்திருத்தங்கள் காரணமாக இன்று விளைபொருள் வர்த்தகமும் செழித்தோங்கி வருகிறது. ‘திராவிட மாடல்தான் இந்தியாவுக்கான திசைக்காட்டி’ என தமிழக முதல்வர் இப்போது அறுதியிட்டு கூறுகிறார் என்றால், நம் வேளாண்துறையின் வியத்தகு வளர்ச்சியும் அதில் ஒரு அங்கம் என்றே கருதவேண்டும்.