தண்ணீர், மின்சார தட்டுப்பாடு எதிரொலி; இளைஞர்கள் போராட்டத்தால் மடகாஸ்கரில் ஆட்சி கவிழ்ப்பு: ஆட்சியாளர்கள் வீடுகள் சூறை; 22 பேர் பலி
அண்டனானரிவோ: தொடர் மின்வெட்டு மற்றும் குடிநீர் தட்டுப்பாட்டைக் கண்டித்து இளைஞர்கள் நடத்திய மாபெரும் போராட்டம் வன்முறையாக மாறியதையடுத்து, மடகாஸ்கர் அதிபர் தனது அரசாங்கத்தையே கலைத்துள்ளார். ஆப்பிரிக்க நாடான மடகாஸ்கரில் நீண்ட காலமாக நிலவி வரும் கடுமையான மின்வெட்டு மற்றும் குடிநீர் தட்டுப்பாட்டால் மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இதைக் கண்டித்து, கடந்த வாரம் தலைநகர் அண்டனானரிவோவில் இளைஞர்கள் மாபெரும் போராட்டத்தைத் தொடங்கினர். ‘ஜென் இசட்’ மற்றும் ‘லியோ டெலஸ்டேஜ்’ (மின்வெட்டால் சலித்துவிட்டோம்) என்ற பெயர்களில் சமூக வலைதளங்கள் மூலம் ஒருங்கிணைக்கப்பட்ட இந்தப் போராட்டம், கென்யா மற்றும் நேபாளத்தில் நடைபெற்ற இளைஞர் போராட்டங்களை பிரதிபலித்தது.
அமைதியான முறையில் தொடங்கிய இந்தப் போராட்டம், நாளடைவில் வன்முறையாக மாறியது. போராட்டக்காரர்கள் அதிபர் ஆண்ட்ரி ரஜோலினா பதவி விலகக் கோரியும் முழக்கங்களை எழுப்பினர். போராட்டத்தைக் கட்டுப்படுத்த பாதுகாப்புப் படையினர் கண்ணீர்ப்புகைக் குண்டுகள் மற்றும் ரப்பர் தோட்டாக்களைப் பயன்படுத்தினர். இந்த மோதல்களில் இதுவரை 22 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. மேலும், தலைநகர் முழுவதும் உள்ள பல்பொருள் அங்காடிகள், வங்கிகள், வீட்டு உபயோகப் பொருட்கள் கடைகள் மற்றும் சில அரசியல்வாதிகளின் வீடுகளும் சூறையாடப்பட்டன.
இதனால், தலைநகரில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த நிலையில், நாட்டு மக்களுக்குத் தொலைக்காட்சியில் உரையாற்றிய அதிபர் ஆண்ட்ரி ரஜோலினா, ‘அரசுப் பணியில் இருப்பவர்கள் யாரேனும் தங்கள் கடமைகளைச் செய்யத் தவறியிருந்தால், அதற்காக நான் மன்னிப்புக் கோருகிறேன். அடுத்த மூன்று நாட்களுக்குள் புதிய பிரதமரைத் தேர்ந்தெடுப்பதற்கான பணிகள் நடைபெறும். அதுவரை தற்போதைய பிரதமர் இடைக்கால பிரதமராகத் தொடர்வார்’ என்று குறிப்பிட்டு தற்போதைய ஆட்சியை அதிபர் கலைத்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.