திருப்போரூர்: தையூர் கிராமத்தில் பொதுப்பணி துறைக்கு சொந்தமான ஏரியில் மண் எடுப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, இன்று அதிகாலை மண் அள்ளி வந்த லாரிகளை வழிமறித்து அப்பகுதி மக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். கேளம்பாக்கம் அருகே தையூர் கிராமத்தில் பொதுப்பணித் துறைக்கு சொந்தமான பிரமாண்ட ஏரி உள்ளது. இந்த ஏரியை தூர்வாரி ஆழப்படுத்த பொதுப்பணித்துறை முடிவு செய்து, ஒரு தனியார் நிறுவனத்துக்கு டெண்டர் விடப்பட்டது. இதைத் தொடர்ந்து, கடந்த 10 நாட்களுக்கும் மேலாக தையூர் ஏரியில் இருந்து பொக்லைன் இயந்திரங்கள் மூலம் மண் அள்ளப்பட்டு, லாரிகளில் ஏற்றி செல்லப்பட்டு வருகிறது. இப்பணி இரவு நேரங்களிலும் நடைபெற்று வருவதாக அப்பகுதி மக்களுக்கு தகவல் கிடைத்தது.
இதுகுறித்து தகவலறிந்ததும் விசிக ஒன்றிய செயலாளர் விடுதலை நெஞ்சன் தலைமையில் சமூக ஆர்வலர்கள் மற்றும் அப்பகுதியை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட மக்கள் இன்று அதிகாலை 5 மணியளவில் தையூர் ஏரியின் எதிர்வாயல் பகுதியில் திரண்டு நின்று, அவ்வழியே மண் அள்ளி வந்த லாரிகளை வழிமறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தையூர் ஏரியில் 24 மணி நேரமும் மண் அள்ள அனுமதி வழங்கப்படவில்லை என்றும், அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிகளவு பள்ளம் தோண்டி மண் அள்ளப்பட்டு வருகிறது. இதில், ஒரு லாரிக்கு பர்மிட் போட்டு, அதே பர்மிட்டில் 10 லாரிகளில் ஏரி மண் அள்ளி செல்லப்படுகிறது என்று அப்பகுதி மக்கள் கண்டன கோஷங்கள் எழுப்பினர்.
இதுகுறித்து தகவலறிந்ததும் கேளம்பாக்கம் போலீசாரும், தையூர் ஏரியில் மண் அள்ள ஒப்பந்தம் பெற்ற தனியார் குவாரி நிறுவனத்தினரும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அங்கு மறியலில் ஈடுபட்ட மக்களிடம், சாலை பணிக்காக மட்டுமே இரவில் மண் அள்ளப்பட்டதாகவும், வெளியில் விற்கப்படவில்லை என்று தனியார் குவாரி நிர்வாகத்தினர் தெரிவித்தனர். மேலும், இனி இரவு நேரங்களில் தையூர் ஏரியில் மண் அள்ளப்படாது என்று உறுதியளித்தனர். இதை ஏற்று சுமார் 2 மணி நேர மறியல் போராட்டத்தை கைவிட்டு அப்பகுதி மக்கள் கலைந்து சென்றனர்.