Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

விவசாயப் பயன்பாட்டுக்கு கட்டணம் வசூலிப்பதை கண்டித்து செண்பகம்பேட்டை டோல்கேட்டில் டிராக்டர்களை நிறுத்தி போராட்டம்: வாகனங்கள் செல்ல விடாமல் தடுத்ததால் பரபரப்பு

திருப்புத்தூர்: திருப்புத்தூர் அருகே, விவசாயப் பயன்பாட்டு டிராக்டர்களுக்கு கட்டணம் வசூலிப்பதை கண்டித்து, செண்பகம்பேட்டை டோல்கேட்டை அனைத்துக் கட்சியினர், விவசாயிகள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சிவகங்கை மாவட்டம், திருப்புத்தூர் அருகே, கீழச்சிவல்பட்டியில் செண்பகம்பேட்டை டோல்கேட் உள்ளது. 2017ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த டோல்கேட்டில் இதுவரை விவசாயப் பயன்பாடு டிராக்டர்களுக்கு கட்டணம் ஏதும் வாங்கப்படுவதில்லை. நேற்று முன்தினம் அந்த வழியாக டிராக்டர் ஓட்டி வந்த நபரிடம், டோல்கேட்டை கடந்து செல்ல ரூ.260 கட்டணம் செலுத்த வேண்டும் என வடமாநில தொழிலாளர்கள் கூறியுள்ளனர். இதனால் விவசாயிகள், டிராக்டர் உரிமையாளர்கள், பொதுமக்கள் டோல்கேட் முன்பு திரண்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். கீழச்சீவல்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சமரசம் செய்து அனுப்பி வைத்தனர்.

இச்சம்பவத்தை கண்டித்து திமுக, அதிமுக, காங்கிரஸ், நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் விவசாயிகள், பொதுமக்கள் டோல்கேட்டை நேற்று முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். டோல்கேட் வழியாக வாகனங்கள் செல்வதை தடுக்கும் வகையில் மூன்று டிராக்டர்களை நிறுத்தி மறித்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, டோல்கேட்டில் டிராக்டர்களுக்கு கட்டணம் வசூலிக்கக் கூடாது. இந்த இரண்டு வழி சாலையில், நான்குவழி சாலைக்கான கட்டணம் கூடுதலாக வசூல் செய்யப்படுகிறது. டோல்கேட் அருகே சில கிலோ மீட்டர் சுற்றளவில் உள்ளவர்களுக்கு சலுகை கட்டணத்தையும் செயல்படுத்தவில்லை என போராட்டக்காரர்கள் புகார் தெரிவித்தனர்.

இதையடுத்து, புகாராக கொடுத்தால் உரிய நடவடிக்கை எடுப்பதாகவும், கலைந்து செல்லுமாறும் ேபாலீசார் தெரிவித்தனர். இதையடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். மேலும், கீழச்சீவல்பட்டி காவல்நிலையத்தில், ‘டோல்கேட்டில் டிராக்டர்களை இலவசமாக அனுமதிக்க வேண்டும். இரண்டுவழிச் சாலைக்கான கட்டணம் மட்டுமே வசூலிக்க வேண்டும். கூடுதலாக கட்டணம் வசூலித்தவர்கள் மீது விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என புகாரளிக்கப்பட்டது.