Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

போராட்டத்தில் ஆள் கணக்கு காட்டுவதற்காக கொளுத்தும் வெயிலில் கிராமத்தினரை நிறுத்தி வாளி வழங்கிய அதிமுகவினர்: மக்கள் ஆதரவு இல்லாததால் மாஜி அமைச்சர் அதிர்ச்சி

பேரையூர்: மதுரை மாவட்டம், பேரையூர் தாலுகா, டி.கல்லுப்பட்டி பேரூராட்சி அழகுநாச்சியார் ஊரணி சீரமைப்பு பணி தொடர்பாக அதிமுக முன்னாள் அமைச்சர் உதயகுமார் தனது ஆதரவாளர்களுடன் ஊரணிக்கரையில் பந்தல் போட்டு நேற்று திடீர் போராட்டம் நடத்தினார். ஆனால் போராட்டம் நடத்தும் அளவுக்கு போதிய அளவில் ஆட்கள் இல்லாததால், ஆதரவாளர்களை அனுப்பி, பொதுமக்களுக்கு பிளாஸ்டிக் வாளி தருவதாக டி.கல்லுப்பட்டி மற்றும் புறநகர் பகுதிகளில் தகவல் பரப்பினார். இதையடுத்து அங்கு ஏராளமானோர் குவிந்தனர். அவர்களை ஊரணிக்குள் அழைத்து சென்று கொளுத்தும் வெயிலில் நீண்ட வரிசையில் காத்திருக்கும்படி செய்து உதயகுமார் பிளாஸ்டிக் வாளி வழங்கினார்.

வாளிகளை வாங்கியவர்கள் போராட்டப் பந்தலுக்கு வராமல் வீடுகள் நோக்கி புறப்பட்டுச் சென்றனர். இதனால் அதிர்ச்சியடைந்த உதயகுமார், வாளி வழங்கும் பணியை பாதியிலேயே நிறுத்தினார். அங்கிருந்த பொதுமக்களுக்கு வாளிகளை வழங்காமல் போராட்டத்தில் பங்கேற்பவர்கள் என்ற கணக்கில் பந்தல் அருகே நீண்ட நேரம் நிறுத்தி வைத்தனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு வாகனங்கள் நெரிசலில் சிக்கின. இதையடுத்து வார்டு வாரியாக வந்து வாளி தருகிறோம் என்று கூறி, வெறுங்கையுடன் அனுப்பி வைத்தனர். இதனால், அங்கு வந்த கிராம மக்கள், உங்கள் அரசியல் நாடகத்துக்கு நாங்கள்தானா கிடைத்தோம் என கூறிய படி கடும் அதிருப்தியுடன் திரும்பிச் சென்றனர்.