Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
Chettinad Cements
search-icon-img
Advertisement

கோவையில் வேளாண் மாநாட்டை தொடங்க வந்த மோடியை கண்டித்து பல அமைப்புகள் போராட்டம்: கருப்புக்கொடி, உருவபொம்மை எரிப்பு, மறியலால் பரபரப்பு

கோவை: கோவையில் வேளாண் மாநாட்டை தொடங்க வந்த பிரதமர் மோடியை கண்டித்து பல அமைப்புகள் கருப்புக்கொடி போராட்டத்தில் ஈடுபட்டு, உருவபொம்மை எரித்து மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. ஒன்றிய பாஜ அரசு தன்னுடைய கட்சி ஆளும் மாநிலங்களுக்கு திட்டங்களை செயல்படுத்த தேவைக்கு அதிகமான நிதியை ஒதுக்குவதும், எதிர்கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கு ஒதுக்கீடு செய்ய வேண்டிய நிதியை கூட ஒதுக்காமல் தொடர்ந்து வஞ்சித்தும் வருகிறது. குறிப்பாக, தமிழ்நாட்டிற்கான ஜிஎஸ்டி பங்களிப்பு, கல்வி நிதி உள்ளிட்டவைகளை ஒதுக்காமல் புறக்கணித்து வருகிறது.

நீட் விலக்கு தொடர்பாக பல முறை தமிழக சட்டமன்றத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றியும் ஆளுநர் ஒப்புதல் கொடுக்காமல் கிடப்பில் போட்டுள்ளார். காலநிலை மாற்றத்தால் கடந்த 10 ஆண்டுகளாக பல்வேறு இயற்கைப் பேரிடர்களால் பாதிக்கப்பட்ட தமிழ்நாட்டிற்கு முறையான நிதியை வழங்காமல் ஒன்றிய அரசு புறக்கணித்து வருகிறது. மிக்ஜாம், பெஞ்சல் புயல் பாதிப்புகளுக்காக இதுவரையில் ஒன்றிய அரசு சார்பில் எந்த நிதியும் விடுவிக்கப்படவில்லை. மாநில பேரிடர் நிவாரண நிதிக்காக வழங்கப்பட்ட தொகையை தேசிய பேரிடர் நிதியிலிருந்து வழங்கியதை போன்ற தோற்றத்தை ஒன்றிய அரசு உருவாக்கி வருகிறது.

இதேபோல திட்டங்களை செயல்படுத்துவதிலும் ஒன்றிய அரசு பாகுபாடு காட்டி வருகிறது. இதேபோன்று, தேர்தல் நேரத்தில் மட்டும் பிரதமர் மோடி தமிழ்நாட்டிற்கு வரும் போது தமிழ், தமிழர்கள் என பெருமை பேசுவதும் அதே மோடி வடமாநிலங்களுக்கு சென்று தமிழர்களை பற்றி கொச்சைப்படுத்துவதையும் வாடிக்கையாக கொண்டுள்ளார். சமீபத்தில் நடந்து முடிந்த பீகார் தேர்தல் பிரசாரத்தின் போது தமிழ்நாட்டில் பீகார் மக்கள் தாக்கப்படுகின்றனர் என்று பேசினார். இது தமிழ்நாட்டில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

இந்த பிரச்னை ஓய்வதற்குள், 20 லட்சம் மக்கள் தொகை இல்லை என காரணம் காட்டி கோவை மற்றும் மதுரைக்கான மெட்ரோ ரயில் திட்டத்தை நேற்று முன்தினம் ஒன்றிய அரசு நிராகரித்திருப்பது மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. 2011ம் ஆண்டு நடந்த மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, இந்த இரு நகரங்களிலும் மெட்ரோ ரயில் திட்டத்திற்கு தேவையான 20 லட்சம் மக்கள் தொகை இல்லை என்பதே இதற்கு காரணமாக கூறப்படுகிறது. 2011ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி கோவை மாநகராட்சி எல்லையில் மக்கள் தொகை 15.38 லட்சமாகவும், மதுரை மாநகராட்சி எல்லையில் மக்கள் தொகை 16.15 லட்சமாகவும் இருந்தது.

தற்போது 14 ஆண்டுகள் கடந்து உள்ள நிலையில், மக்கள் தொகை அதிகரித்து 20 லட்சத்தை தாண்டி உள்ளது. ஆனாலும், ஒன்றிய அரசு மெட்ரோ ரயில் திட்டத்தை நிராகரித்து உள்ளது. அதே நேரத்தில், 20 லட்சம் மக்கள் தொகை இல்லாத பாஜ ஆளும் மாநிலங்களில் மெட்ரோ ரயில் திட்டத்துக்கு ஒன்றிய அரசு ஒப்புதல் வழங்கி உள்ளது. ஒன்றிய அரசின் இந்த ஓரவஞ்னையை கண்டித்து கோவை வரும் மோடியை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என பல்வேறு அமைப்புகள் அறிவித்திருந்தன.

அதன்படி, கோவையில் நேற்று இயற்கை வேளாண் விவசாயிகள் மாநாட்டை துவக்கி வைக்க பிரதமர் மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்தும், ஒன்றிய அரசு தமிழ்நாட்டை வஞ்சிக்கும் வகையில் கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டங்களை நிராகரித்ததை கண்டித்தும், இந்த திட்டத்தை உடனடியாக செயல்படுத்த வேண்டும் என வலியுறுத்தியும் மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் மற்றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் சார்பில் நேற்று கோவை கலெக்டர் அலுவலகம் அருகேயுள்ள பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.

இதேபோல், பீகார் தேர்தலில் தமிழர்கள் மீது அவதூறு பரப்பிய பிரதமர் மோடியை கண்டித்து கோவை பீளமேடு மசக்காளிபாளையம் பகுதியில் முற்போக்கு அமைப்புகள் சார்பில் கருப்புக்கொடி போராட்டம் நடந்தது. இதில், காங்கிரஸ், திக, விசிக, தபெதிக, ஆதித்தமிழர் பேரவை, திராவிடர் தமிழர் கட்சி, திராவிட இயக்கத் தமிழர் பேரவை, தமிழ் புலிகள் கட்சி, மக்கள் அதிகாரம் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் கலந்து கொண்டனர். போராட்டத்தின்போது ‘‘மோடியே திரும்பி போ’’ என பிரதமர் மோடிக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

அப்போது திடீரென பிரதமர் மோடியின் உருவ பொம்மை எரித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்ய முயன்ற போது, அவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட ஆதித்தமிழர் பேரவை தலைவர் அதியமான், காங்கிரஸ் கவுன்சிலர் காயத்ரி உள்பட 100க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர். இதேபோல் கோவை மாவட்டம், அவினாசியில் மோடிக்கு எதிராக கருப்புக்கொடி காட்டி, போராட்டம் நடத்த முயன்ற ஆதி தமிழர் பேரவையினர் கைது செய்யப்பட்டனர்.

கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு விவசாயிகள் கூட்டமைப்பு சார்பில் கருப்பு கொடி போராட்டம் நேற்று நடந்தது. இதில் காவிரி - குண்டாறு பாசன விவசாயிகள் கூட்டமைப்பு, தமிழக விவசாயிகள் கூட்டியக்கம் உள்ளிட்ட பல்வேறு விவசாய சங்கங்களை சேர்ந்தவர்கள் கலந்துகொண்டு, பிரதமர் மோடியை கண்டித்து கண்டன முழக்கங்களை எழுப்பினர். போராட்டத்தில் ஈடுபட்ட 83 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த ராஜேந்திர சிங் என்ற விவசாயியும் கலந்து கொண்டார்.

இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், ‘மரபணு மாற்றப்பட்ட விதைகள் குறித்த ஆராய்ச்சிக்காக ரூ.500 கோடி ஒதுக்கிய பிரதமர் மோடிக்கு, இயற்கை விவசாயிகள் மாநாட்டில் பங்கேற்க தார்மீக உரிமை இல்லை. மரபணு மாற்றப்பட்ட விதைகளை அனுமதிக்க கூடாது. நதி நீர் இணைப்பில் ஒன்றிய அரசு பாரபட்சமாக நடந்து கொண்டிருக்கிறது. 10 ஆண்டுகளாக தென்னக நதிகளை இணைக்க ஒன்றிய அரசு எந்த நிதியும் ஒதுக்கவில்லை. விவசாயிகளின் உற்பத்தி பொருட்களுக்கு 2 மடங்கு விலை கொடுப்போம் என பிரதமர் மோடி அறிவித்தார். ஆனால் அக்கோரிக்கையை பிரதமர் மோடி நிறைவேற்றவில்லை. இயற்கை விவசாயத்திற்கு ஒன்றிய அரசு நிதி ஒதுக்குவதில்லை. போலி விவசாயிகள் நடத்தும் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்கிறார்’ என்றனர்.

* இன்று திமுக ஆர்ப்பாட்டம்; 24ல் மதிமுக போராட்டம்

கோவை மற்றும் மதுரை மெட்ரோ ரயில் திட்டத்தை ரத்து செய்ததை கண்டித்து, திமுக மற்றும் கூட்டணி கட்சியினர் சார்பில் கோவையில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல, மதிமுக சார்பில் வரும் 24ம் தேதி கோவையில் மோடி அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அறிவித்து உள்ளார்.

* தொழில் கூட்டமைப்பினர் கடும் எதிர்ப்பு

கோவை மாவட்ட சிறுதொழில் சங்க (கொடிசியா) தலைவர் கார்த்திகேயன் கூறுகையில், ‘‘கோவை நகரில் தற்போது 31 லட்சம் மக்கள் வசித்து வருகின்றனர். ஐடி தொழில் வளர்ச்சி உச்சத்தில் இருக்கிறது. இந்நிலையில், மெட்ரோ திட்ட அறிக்கையை திருப்பி அனுப்பியது பெரும் ஏமாற்றம் அளிக்கிறது. இது கோவைக்கு பெரும் பின்னடைவு’’ என்றார்.

தமிழ்நாடு குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் அமைப்புகளின் (டாக்ட்) கோவை மாவட்ட தலைவர் ஜேம்ஸ் கூறுகையில், ‘கோவை மக்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்பாக உள்ள மெட்ரோ ரயில் திட்டத்துக்கு ஒன்றிய அரசு அனுமதி மறுத்துள்ளது பெரும் அதிர்ச்சி அளிக்கிறது. நாளுக்கு நாள் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண கோவைக்கு மெட்ரோ ரயில் திட்டம் அவசியம். கோவை மக்களின் நலன் கருதி உடனடியாக இந்த திட்டத்தை அமல்படுத்த வேண்டும்’’ என்றார்.

கோவை நெக்ஸ்ட் அமைப்பின் மையக்குழு உறுப்பினர் சதீஷ் கூறுகையில், ‘‘மெட்ரோ ரயில் திட்டத்திற்காக 15 ஆண்டுகளாக கோவை மக்கள் காத்திருக்கும் நிலையில், ஒன்றிய அரசு இத்திட்டத்தை நிராகரித்து இருப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது. ஒன்றிய அரசின் இந்த பிடிவாதம், வளரும் நகரமான கோவைக்கு பெரும் பின்னடைவாக அமையும்’’ என்றார்.

கோவை சின்னவேடம்பட்டி தொழில் கூட்டமைப்பு தலைவர் தேவகுமார் கூறுகையில், ‘‘மெட்ரோ ரயில் திட்டத்திற்கு அனுமதி இல்லை என்ற செய்தி கோவை தொழில் துறையினரிடையே பெரும் அதிருப்தியையும், கவலையையும் ஏற்படுத்தி உள்ளது. ஒன்றிய அரசு தனது முடிவை மாற்றி, கோவை மெட்ரோ ரெயில் திட்டத்திற்கு தாமதமின்றி அனுமதி வழங்க வேண்டும்’’ என்றார்.

கோவை, திருப்பூர் மாவட்ட குறுந்தொழில் முனைவோர் சங்க (காட்மா) தலைவர் சிவக்குமார் கூறுகையில், ‘‘கோவையைவிட மக்கள் தொகை குறைவான, சிறிய நகரங்களிலும் மெட்ரோ ரயில் திட்டம் செயல்பாட்டில் உள்ளது. 2011ம் ஆண்டு எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பை வைத்துக்கொண்டு கோவைக்கு மெட்ரோ இல்லை என்பதை ஏற்க முடியாது. கோவையின் வளர்ச்சிக்கு மெட்ரோ ரயில் அவசியம் வேண்டும்’’ என்றார். இதேபோல் பல்வேறு பொதுநல அமைப்புகள், குறுந்தொழில் முனைவோர் என பல்வேறு தரப்பினரும் ஒன்றிய பா.ஜ. அரசின் ஓரவஞ்சனை கண்டித்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

* காவிரி விவசாய சங்க தலைவருக்கு வீட்டு காவல்

கோவையில் நடக்கும் வேளாண் மாநாட்டில் கலந்து கொள்ள வருகை தந்த பிரதமர் மோடிக்கு கருப்பு கொடி காட்டி அவருக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அனைத்து விவசாயிகள் சங்கம் சார்பில் அறிவிப்பு வெளியானது. இந்நிலையில் கருப்புக்கொடி காட்ட விவசாயிகளுடன் கோவை செல்வதற்காக திட்டமிட்டு இருந்த தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்க மாநிலத்தலைவர் பழனியப்பனை தஞ்சாவூரில் உள்ள அவரது இல்லத்தில் நேற்றுமுன்தினம் இரவு 10மணியளவில் தமிழ் பல்கலைக்கழக போலீசார் வீட்டுக்காவலில் சிறை வைத்தனர்.