*நடவடிக்கை எடுப்பதாக ஆணையர் உறுதி
தோகைமலை : தோகைமலை ஒன்றிய அலுவலகத்தில் 100நாள் வேலை கேட்டு அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கம் சார்பாக மனு கொடுக்கும் போராட்டம் நடந்தது.
கரூர் மாவட்டம், தோகைமலை ஒன்றிய அலுவலகத்தில் அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கம் சார்பாக கல்லடை ஊராட்சி கீழவெளியூர் பகுதி பொதுமக்களுக்கு 100 நாள் வேலை கேட்டு மனு கொடுக்கும் போராட்டம் நடந்தது. இந்த போராட்டத்திற்கு அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கத்தின் ஒன்றிய துணை தலைவர் பெருமாள் தலைமை வகித்தார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியகுழு நிர்வாகி வடிவேல், வாலிபர் சங்கத்தின் மாவட்டப் பொருளாளர் பிரகாஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளர்களாக அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் ராஜு, தமிழ்நாடு விவசாய சங்கத்தின் மாவட்ட செயலாளர் சக்திவேல், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தோகைமலை ஒன்றிய செயலாளர் சுப்பரமணியன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.
முன்னதாக தோகைமலை பேருந்து நிலையம் அருகில் இருந்து ஊர்வலமாக தோகைமலை ஒன்றிய அலுவலகத்திற்கு நடந்து சென்றனர். பின்னர் ஒன்றிய அலுவலகம் முன்பாக 100 நாள் வேலை கேட்டு கையில் மனுக்களை வைத்துக்கொண்டு கோஷங்களை எழுப்பினர்.
தகவலறிந்த தோகைமலை ஒன்றிய ஆணையர் பாலசுப்ரமணி, தோகைமலை எஸ்ஐ பாலசுப்பிரமணியன், 100 நாள் திட்டத்தின் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் விவேகானந்தன் ஆகியோர் கோரிக்கை மனுவை பெற்றுக்கொண்டனர்.
பின்னர் அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் ராஜு, தமிழ்நாடு விவசாய சங்கத்தின் மாவட்டச் செயலாளர் சக்திவேல், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தோகைமலை ஒன்றிய செயலாளர் சுப்பரமணியன் ஆகியோர் கூறும்போது, கல்லடை ஊராட்சி கீழவெளியூர் பொதுமக்களுக்கு 100 நாள் வேலை நீண்ட நாட்களாக வழங்கவில்லை. இதனால் 100 நாள் வேலையை நம்பி இருக்கும் மக்களுக்கு போதிய வருமானம் இல்லாமல் அவதிப்படுகின்றனர்.
ஆகவே உடனடியாக 100 நாள் வேலை வழங்க வேண்டும் என்றனர். இதனை கேட்டறிந்த ஒன்றிய ஆணையர் பாலசுப்பிரமணி, உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்ததால் அனைவரும் கலைந்து சென்றனர்.
இதில் அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கம், தமிழ்நாடு விவசாய சங்கம், தோகைமலை ஒன்றிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நிர்வாகிகள், கீழவெளியூர் பகுதி 100 நாள் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.