சென்னை: கல்வியை கொச்சைப்படுத்திய எடப்பாடியை கண்டித்து கோவையில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று திமுக மாணவர் அணி அறிவித்துள்ளது. திமுக மாணவர் அணிச் செயலாளர் ராஜீவ்காந்தி வெளியிட்ட அறிவிப்பு: எடப்பாடி பழனிசாமி இப்போது, ‘உங்களுக்கெல்லாம் எதற்கு கல்வி?’ என்ற சங்கிகளின் குரலாய் ஒலிக்கத் தொடங்கியிருக்கிறார்.
திராவிட இயக்கத்தின் துரோகியாக, கல்விக்காக திராவிட மாடல் அரசு எடுக்கும் முன்னெடுப்புகளைக் கொச்சைப்படுத்தும் விதமாக கோவையில் பேசியுள்ள எடப்பாடி பழனிசாமியை கண்டித்து திமுக மாணவர் அணி சார்பில் 14ம் தேதி(இன்று) பிற்பகல் 2.30 மணி அளவில், கோவை, டாடாபாத், சிவானந்தா காலனியில் எனது தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
ஆர்ப்பாட்டத்திற்கு மாணவர் அணி மாநில துணைச் செயலாளர்கள் மன்னை த.சோழராஜன், சேலம் இரா.தமிழரசன், அதலை பி.செந்தில்குமார், தமிழ் கா.அமுதரசன், பி.எம்.ஆனந்த், வி.ஜி.கோகுல், பூர்ண சங்கீதா சின்னமுத்து, ஜெ.வீரமணி, ஜெ.இராமகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். இதில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கலந்து கொண்டு கண்டன உரையாற்றுகிறார். இக்கண்டன ஆர்ப்பாட்டத்தில் அனைவரும் பங்கேற்க வேண்டும்.