சுற்றுச்சூழலை பாதுகாக்க இந்தியாவில் அதிக முன்னெடுப்பு எடுக்கும் மாநிலம் தமிழ்நாடு: துணை முதல்வர் உதயநிதி பேச்சு
சென்னை: இந்தியாவிலேயே சுற்றுச்சூழலை பாதுகாக்க அதிக முன்னெடுப்புகளை தமிழ்நாடுதான் எடுக்கிறது என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கூறினார். சென்னை சாந்தோம் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் தமிழ்நாடு துறவியர் பேரவை சார்பில் நடந்த சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலியுறுத்தி கன்னியாகுமரி முதல் சென்னை வரையிலான ‘பசுமையான பூமி என்னாலே தொடங்கும்’ என்ற மிதிவண்டிப் பயணத்தின் நிறைவு விழாவில் மிதிவண்டிப் பயணத்தில் ஈடுபட்ட மாணவ, மாணவிகளை பாராட்டி துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பரிசுகளை வழங்கினார்.
விழாவில் அவர் பேசியதாவது: இந்தியாவுடைய தலைநகர் டெல்லியில் பயங்கர மாசுபாட்டினால் சுவாசப் பிரச்னை இருக்கிறது. ஆனால் தமிழ்நாட்டைப் பொறுத்தவரைக்கும் நாம் பாதுகாப்பான ஒரு இடத்தில் இப்போது இருந்து கொண்டிருக்கின்றோம். இன்றைக்கு தமிழ்நாடு அரசு சார்பாகவும் நிறைய மின்சார பேருந்தை உபயோகப்படுத்திக் கொண்டிருக்கிறோம். மின்சாரம் தயாரிப்பதில் கூட பசுமை ஆற்றலுக்குதான் அரசு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. சூரிய ஆற்றல், காற்று ஆற்றல் என்று கூடுதல் கவனம் செலுத்தி வருகிறோம். இந்தியாவிலேயே சுற்றுச் சூழலைப் பாதுகாக்க அதிக முன்னெடுப்புகளை எடுக்கின்ற மாநிலம் என்றால் அது தமிழ்நாடு தான். இவ்வாறு அவர் கூறினார்.


