உரிமையியல் பிரச்னை தொடர்பான புகாரில் எப்ஐஆர் இல்லாமல் விசாரணை நடத்த தடை: மீறினால் நடவடிக்கை ஐகோர்ட் கிளை உத்தரவு
மதுரை: திருநெல்வேலியை சேர்ந்த அப்துல் காதர், பெரோஷ்கான் உள்ளிட்ட 7 பேர் ஐகோர்ட் கிளையில் தாக்கல் செய்த மனு: நாங்கள் டைல்ஸ் தொழில் செய்து வருகிறோம். நாங்கள் இதே பகுதியைச் சேர்ந்த நபரிடம் கொடுக்கல், வாங்கலில் ஈடுபட்டு வந்தோம். எங்கள் மீது, அந்த நபர் நாங்கள் ரூ.3 கோடியை கடனாக வாங்கி கொண்டு திருப்பி தரவில்லை என போலீசில் புகார் மனு அளித்தார். மனுவின் அடிப்படையில் நெல்லை குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் எங்கள் மீது வழக்குப்பதிவு செய்யாமல், விசாரணை என்ற பெயரில் பல மணி நேரம் அமர வைத்து துன்புறுத்தலில் ஈடுபட்டு வருகின்றனர். எனவே, எங்களை துன்புறுத்தக் கூடாது என போலீசாருக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு கூறியிருந்தனர்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி பி.புகழேந்தி பிறப்பித்த உத்தரவு: குடும்ப பிரச்னை, சொத்து பிரச்னை உள்ளிட்ட உரிமையியல் பிரச்னைகளுக்காக காவல் நிலையத்தில் கொடுக்கப்படும் புகார் மனுக்களில் முகாந்திரம் இருந்தால் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து இரு தரப்பினருக்கும் சம்மன் அனுப்பி விசாரணை நடத்த வேண்டும். விசாரணை அதிகாரி சம்மன் அனுப்பி காவல் நிலையத்தில் விசாரணை நடத்தக் கூடாது. அப்படி நடத்துவது சட்டவிரோதம்.
மாவட்ட எஸ்பி அலுவலகத்தில், உரிமையியல் பிரச்னைகளுக்காக கொடுக்கும் புகார் மனுவின் அடிப்படையில், தொடர்புடைய காவல் நிலைய அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்யாமல் அழைத்து விசாரணை நடத்தும் நடைமுறையை உடனடியாக அனைத்து காவல் நிலையங்களிலும் நிறுத்த வேண்டும்.
இந்த நடைமுறைக்கு தடை விதிக்கப்படுகிறது. உரிமையியல் புகாருக்கு காவல் நிலையத்தில் பேச்சு வார்த்தை நடத்தினால் காவல் நிலைய விசாரணை அதிகாரி மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். இதில், ஐகோர்ட் மதுரை கிளை தாமாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கும். இதுகுறித்து தற்போது பிறப்பித்த உத்தரவையும் அனைத்து மாவட்ட எஸ்பிக்கள் மற்றும் காவல் ஆணையர்களுக்கு தமிழ்நாடு டிஜிபி அனுப்பி வைக்க வேண்டும் என உத்தரவிட்டார்.
