மும்பை: பாலிவுட் நடிகை கரிஷ்மா கபூர், தொழிலதிபரான சஞ்சய் கபூர் என்பவரை கடந்த 2003ம் ஆண்டு திருமணம் செய்தார். பிறகு 2016ல் இருவரும் பரஸ்பர விவாகரத்து பெற்று பிரிந்தனர். இவர்களுக்கு சமைரா என்ற மகளும், கியான் என்ற மகனும் உள்ளனர். அதன்பிறகு பிரியா சச்தேவ் என்பவரை சஞ்சய் கபூர் இரண்டாவதாக திருமணம் செய்துகொண்டார். இத்தம்பதிக்கு ஒரு மகன் உள்ளார். இந்நிலையில் கடந்த ஜூன் மாதம் லண்டன் சென்றிருந்த சஞ்சய் கபூர் மாரடைப்பால் உயிரிழந்தார்.
சஞ்சய் கபூர் உயிரிழந்த நிலையில் அவரின் ரூ.30,000 கோடி சொத்துக்கள் யாருக்கு சொந்தம் என்ற பிரச்னை எழுந்துள்ளது. சஞ்சய் கபூர் தனது பெயரில் உயில் எழுதி வைத்திருப்பதாக பிரியா சச்தேவ் கூறுகிறார். ஆனால் இன்னொரு பக்கம் சஞ்சய் கபூரின் வாரிசுகள் தாங்கள்தான் அதனால் அந்த சொத்துக்கள் எங்களுக்குத்தான் சொந்தம் என்று கரிஷ்மாவின் மகளும், மகனும் உரிமை கோரி வழக்கு தொடர்ந்துள்ளனர்.
சஞ்சய் கபூர் எழுதிவைத்த உயிலை பிரியா சச்தேவ் மாற்றியமைத்ததாக அவர் மீது கரிஷ்மா தரப்பினர் குற்றம் சாட்டுகின்றனர். மேலும், உண்மையான உயிலை அவர்கள் யாரிடமும் காட்டவில்லை என்றும், இதில் நீதிமன்றம் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில் தந்தையின் 30 ஆயிரம் கோடி சொத்தில் பங்கு கோரி தொடரப்பட்ட வழக்கு தற்போது டெல்லி உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.