டெல்லி: நீதிமன்ற உத்தரவு இல்லாமல்சொத்துக்களை பறிமுதல் செய்யும் அமலாக்கத்துறையின் அதிகாரம் தவறானது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து பதிலளிக்க ஒன்றிய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. கர்நாடகாவை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் வீரேந்திரா தனது சொத்துக்களை அமலாக்கத்துறை சட்டவிரோதமாக முடக்கி உள்ளதாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இது தொடர்பான வழக்கில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தகி அமலாக்கத்துறைக்கு வழங்கப்பட்டுள்ள அளவுக்கு அதிகமான அதிகாரம் அதனை முறைகேடாக பயன்படுத்துவதற்கு வழிவகுப்பதாக குற்றம் சாட்டினார்.
சட்டமன்ற உறுப்பினர் சித்ரதுர்கா இயங்க முடியாத நிலையில், அவரது வங்கி கணக்குகள், ஆபரணங்கள், வாகனங்கள் என்று அனைத்தையும் அமலாக்கத்துறை முடக்கி வைத்திருப்பதாகவும் முகுல் ரோத்தகி வாதிட்டார். அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள் பணபரிமாற்ற சட்டத்தில் சில தவறுகள் இருப்பதாக கூறினர். சொத்துக்கள் மீதும், அரசியல் அமைப்பு பாதுகாப்புகள் மீதும் நீதித்துறை சாராத நபர்கள் எப்படி முடிவு எடுக்க முடியும்? என்று கேள்வி எழுப்பினர். இதனைத்தொடர்ந்து ஒன்றிய அரசு மற்றும் அமலாக்கத்துறை பதிலளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர். பின்னர் அமலாக்கத்துறை சட்ட விதிகளுக்கு எதிராக நிலுவையில் உள்ள மனுக்களோடு இணைத்து விசாரிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


