புரொஜெக்டரை சுத்தம் செய்து கொண்டிருந்த போது லிப்ட் தானாக இயங்கியதில் பொறியாளர் தலை நசுங்கி பலி: பிரபல வணிக வளாகத்தில் பரபரப்பு சம்பவம்; போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை
சென்னை: ராயப்பேட்டையில் உள்ள பிரபல வணிக வளாகத்தில் புரொஜெக்டரை சுத்தம் செய்யும் போது லிப்ட் தானாக இயங்கியதில் பொறியாளர் ஒருவர் தலை நசுங்கி துடிதுடித்து உயிரிழந்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னை ராயப்பேட்டையில் பிரபல வணிக வளாகம் இயங்கி வருகிறது. இந்த வளாகத்தில் திரையரங்குகள் உள்ளன. இதில் 4வது திரையரங்கில் ஸ்கிரீனில் சுத்தம் செய்யும் பணி நேற்று அதிகாலை நடந்தது. இந்த பணியை பெரம்பூரை சேர்ந்த ராஜேஷ் (34) பழுது நீக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். 4வது ஸ்கிரீனில் ஹைட்ராலிக் லிப்ட் பழுதானதால் ராஜேஷ் மற்றும் மூத்த பொறியாளர் தனசேகர், தொழில்நுட்ப ஊழியர்கள் முருகன், டேவிட் ஆகியோர் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது ராஜேஷ் 25 மீட்டர் உயரத்தில் நின்று புரொஜெக்டரை சுத்தம் செய்து கொண்டிருந்தார். இதற்காக பழுதான லிப்ட்டை இறக்கி வைத்திருந்தனர். அப்போது, திடீரென லிப்ட் தானாக இயங்கி மேல் நோக்கி பாய்ந்து சென்றது. லிப்ட் பாதையின் இடையே நின்று இருந்த பொறியாளர் ராஜேஷின் தலை கட்டிடத்தின் மேல் தளத்தில் பலமாக மோதியது. இதில் தலையில் பலத்த காயமடைந்து ரத்த வெள்ளத்தில் மயங்கினார். உடனே சக ஊழியர்கள் ராஜேஷை மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
ஆனால் அங்கு ஆய்வு செய்த டாக்டர்கள் பொறியாளர் ராஜேஷ் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து ராஜேஷ் மனைவி தேவிகா அண்ணா சாலை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் 2 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து, மூத்த பொறியாளர் தனசேகரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். உயிரிழந்த ராஜேஷ் இந்திய ஜனநாயக இளைஞர் கூட்டமைப்பு திருவிக நகர் 74வது வட்ட பொறுப்பாளராக பணியாற்றி வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவத்தால் சிறிது நேரம் வணிக வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.