தூய்மை பணியாளர் கைதுக்கு எதிர்ப்பு - கம்யூனிஸ்ட் கவுன்சிலர்கள் வெளிநடப்பு; மெரினா கடற்கரை சாலையை மேம்படுத்த புதிய திட்டம்: ரூ.80 கோடியில் புதிய மாமன்ற கூடம் கட்ட தீர்மானம்
சென்னை: சென்னை மாநகராட்சி மாமன்ற கூட்டம் மேயர் பிரியா தலைமையில் இன்று காலை ரிப்பன் கட்டிட வளாகத்தில் உள்ள கூட்ட அரங்கில் நடைபெற்றது. கூட்டத்தில் துணை மேயர் மகேஷ் குமார், ஆணையாளர் குமரகுருபரன் ஆகியோர் முன்னிலை வைத்தனர். கூட்டம் தொடங்கியதும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் இந்திய கம்யூனிஸ்ட் கவுன்சிலர்கள் எழுந்து நின்று தூய்மை பணியாளர்களுக்கு ஆதரவாக கோஷங்களை எழுப்பினர். தூய்மை பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று பேச ஆரம்பித்தனர். இதனால் அவையில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது. அவர்களை இருக்கையில் அமரும்படி மேயர், துணை மேயர் அறிவுறுத்தினர். ஆனாலும் அவர்கள் தொடர்ந்து பேச முயன்றனர். தூய்மை பணியாளர்களை நள்ளிரவில் கைது செய்தது கண்டிக்கத்தக்கது என்று மாநகராட்சிக்கு எதிராக குரல் கொடுத்தனர்.
அவர்களை துணை மேயர் மகேஷ் குமார் இருக்கையில் அமருங்கள் இல்லையென்றால் வெளியேறுங்கள் என்று கூறினார். இதை அடுத்து கம்யூனிஸ்ட் கவுன்சிலர்கள் ஜெயராமன், ரேணுகா, பிரியதர்ஷினி, சரஸ்வதி ஆகியோர் மன்றத்திலிருந்து வெளிநடப்பு செய்தனர். இதைத்தொடர்ந்து மன்ற கூட்டம் தொடர்ந்து நடைபெற்றது. அப்போது கேள்வி நேரத்தின் போது கவுன்சிலர்கள் தங்களின் வார்டுகளில் நிலவும் பிரச்னைகள் குறித்து கூட்டத்தில் பேசினார். அதற்கு மேயர் பிரியா பதிலளித்து பேசினார். அப்போது 61வது வார்டு கவுன்சிலர் பேசும் போது ஃபார்திமா பேசிகையில்: தெரு நாய்களின் தொல்லை அதிகரித்து வருகிறது. மக்களை அச்சுறுத்தும் வகையில் சாலையில் சுற்றி திரிவதால் வாகன ஓட்டிகள், குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் வரை பயப்படுகிறார்கள். எனவே தெரு நாய்கள் தொல்லையை கட்டுப்படுத்தும் நடவடிக்கையை தீவிரப்படுத்தப்பட வேண்டும்.
சென்னையில் 1.80 லட்சம் தெரு நாய்கள் இருப்பதாக சமீபத்திய புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றனர். இதில் 27 சதவீத நாய்களுக்கு மட்டுமே கருத்தடை செய்துள்ளனர் என்றார். இதற்கு மேயர் பிரியா பதிலளித்து பேசுகையில் : தெரு நாய் பிரச்சனைக்கு தீர்வுகாணும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. நாள் ஒன்றுக்கு 3,000 தெரு நாய்களுக்கு ரேபிஸ் மற்றும் தடுப்பூசி பேடப்பட்டு வருகிறது. டிசம்பர் மாதத்திற்குள் ஒரு மண்டலத்திற்கு ஒன்று என 15 மண்டலங்களிலும் கருத்தடை மையம் தொடங்கப்படும். இவ்வாறு அவர் பதிலளித்தார். இந்த கூட்டத்தில் 84 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. அதில் இடம் பெற்றுள்ள முக்கிய தீர்மானங்களின் விவரம் பின்வருமாறு:
மெரினா கடற்கரை உழைப்பாளர் சிலையிலிருந்து கலங்கரை விளக்கம் வரை மேம்படுத்துவதற்கான புதிய திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி 2.30 கி.மீ நீளத்திற்கு 4 மீட்டர் அகலத்திற்கு சிந்தடிக் சைக்கிள் பாதை உருவாக்கப்படும். காமராஜர் சாலையில் இருபுறமும் ஒன்பது இடங்களில் பேருந்து நிறுத்தங்கள் ஏற்படுத்தப்படும். 3 புற காவல் நிலையங்கள் அமைக்கப்படும். காமராஜர் சாலையில் உள்ள பாரம்பரிய கட்டிடங்களை கண்டுகளிக்கும் வகையில் 9 இடங்களில் காட்சி தளங்கள் அமைக்கப்படும். சைக்கிள் பாதையில் தெரு விளக்குகள் மற்றும் பொல்லார்ட் விளக்குகள் அமைக்கப்படும். இந்த புதிய திட்டத்தின் மூலம் மெரினா கடற்கரை காமராஜர் சாலை மேம்படுத்தப்படும். சென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டிட வளாகத்தில் புதிதாக மாமன்ற கூட்டம் நடத்துவதற்காக புதிய கட்டிடம் கட்ட தீர்மானிக்கப்பட்டது. இதற்காக ரூ.80 கோடி மதிப்பீட்டில் இந்த பணியை செயல்படுத்த டெண்டர் விடப்பட்டுள்ளது. வள்ளலார் நகர் பஸ் நிலைய கட்டுமான பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. இதனால் ராமகிருஷ்ணா பள்ளி அருகில் உள்ள காலி நிலத்தை தற்காலிக பேருந்து நிலையமாக மாற்ற அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.