சென்னை: திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி மூலம் தமிழ்நாடு இன்னும் பல சாதனைகளை படைக்கும் என்று திருமாவளவன் கூறினார். சென்னை விமான நிலையத்தில் நேற்று முன்தினம் இரவு விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் நிருபர்களிடம் கூறியதாவது: தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, கல்வியில் சிறந்த தமிழ்நாடு விழாவில் கலந்து தமிழ்நாட்டின் கல்வி திட்டங்களை தங்கள் மாநிலத்தில் நடைமுறைப்படுத்துவேன் என கூறி உள்ளார்.
இது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. தமிழ்நாடு அரசு பல மாநிலங்களுக்கு முன் மாதிரி அரசாக இருக்கிறது. இதுதான் திராவிட மாடல். பிற மாநிலங்களை ஒப்பிடும்போது, தமிழ்நாடு கல்வி உள்ளிட்ட பல தளங்களில் வளர்ச்சி அடைந்துள்ளது. அதனால்தான் பிற மாநிலங்கள், நம்முடைய மாநிலத்தை பின்பற்றும் நிலை வந்துள்ளதை மறுக்க இயலாது. இன்னும் பல சாதனைகளை படைக்க கூடிய அளவிற்கு, பல மாநிலங்கள் பின்பற்ற கூடிய அளவிற்கு, தமிழ்நாடு திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி மூலம் சாதிக்கும். இவ்வாறு அவர் கூறினார்.