சென்னை - கும்பகோணம் பிரதான சாலையில் அமைந்துள்ள காடுவெட்டி என்ற கிராமத்தில் இருந்து ஆண்டிமடம் நோக்கி செல்கிறது ஒரு குக்கிராம சாலை. அந்த சாலையின் இருபுறமும் நெல், நிலக்கடலை, கம்பு, செடி முருங்கை என பலவிதமான பயிர்கள் செழிப்பாக வளர்ந்திருக்கின்றன. இந்த சாலையில் சுமார் 5வது கிலோமீட்டரில் அமைந்திருக்கும் திருக்களப்பூர் என்ற சின்னஞ்சிறு கிராமத்திலும் மேற்சொன்ன பயிர்கள் அனைத்தும் சாகுபடி செய்யப்படுகின்றன. இதில் ராம்பாபு என்ற இளம் விவசாயி மேற்கொள்ளும் விவசாய முறை கவனத்தை ஈர்ப்பதாக இருக்கிறது. தங்களிடம் உள்ள 10 ஏக்கரில் 8 ஏக்கரில் சவுக்கு மட்டுமே பயிரிடுகிறார். அதில் தொடர்ச்சியாக லட்சக்கணக்கில் லாபம் அள்ளுகிறார். என்னதான் அப்படி செய்கிறார் என அறிந்துகொள்ள திருக்களப்பூருக்கு பயணமானோம். தனது சவுக்கு வயல்களை சுற்றிக் காண்பித்தவாறே பேச ஆரம்பித்தார்.
``எங்க ஊர்ல நெல், மல்லாட்டை (நிலக்கடலை, முருங்கை, தர்பூசணின்னு எல்லா பயிரும் விளையும். நாங்களும் அந்த பயிர்களை சாகுபடி செய்வோம். ஒரு கட்டத்துல விவசாய வேலைகளுக்கு ஆள் கிடைக்க ரொம்ப கஷ்டமா இருந்தது. இதை சமாளிக்க என்ன பண்ணலாம்னு யோசிச்சப்ப டிஎன்பிஎல் (தமிழ்நாடு காகித ஆலை நிறுவனம்) கம்பெனிக்காரங்க எங்களைத் தொடர்பு கொண்டாங்க. சவுக்கு மரம் சாகுபடி பண்ணுங்க. நாங்களே நல்ல விலைக்கு எடுத்துக்குறோம். பராமரிப்பு வேலையும் ஈசியா இருக்கும்னு சொன்னாங்க. அவங்க சொல்றது கொஞ்சம் செஞ்சிதான் பார்ப்போமேன்னு சவுக்கு சாகுபடியில இறங்குனோம். இப்போ 15 வருசத்துக்கு மேல சவுக்கு சாகுபடி செய்றோம். தண்ணி இல்லாதப்பவே நாங்க மானாவாரி விவசாயமா சவுக்கு போடுவோம். இப்போ போர் போட்டு தண்ணி எடுக்குறோம். சவுக்கு சாகுபடிக்கு இது நல்ல வசதியா இருக்கு. மரங்கள் நல்லா வளர்ந்து நல்ல எடை கொடுக்குது. இதனால நல்ல லாபமும் கிடைக்குது’’ என்றவரிடம் சவுக்கு சாகுபடி முறைகள் குறித்து கேட்டோம்.
``சவுக்கு சாகுபடி செய்ய முதல்ல நிலத்தை நல்லா கொத்து கலப்பை வச்சி 3 சால் ஏர் ஓட்டணும். அப்புறம் ரொட்டவேட்டர் வச்சி கட்டி இல்லாம ஓட்டுவோம். ஏர் ஓட்டுறதுக்கு முன்னாடி ஏக்கருக்கு
4 டிப்பர் தொழுவுரம் கொட்டுவோம். ஏர் ஓட்டி முடிச்சப்புறம் மூன்றரை அடிக்கு ஒன்னுங்குற கணக்குல பார் அமைப்போம். அதுல 3 அடிக்கு ஒரு கன்றுன்னு நடுவோம். கன்று நட அரை அடி அளவுக்கு குழியெடுத்து அதுலதான் நடுவோம். நாங்க சிஎச் 7 ரக சவுக்கு நாற்றுகளைத்தான் நடவு செய்வோம். நட்டவுடனே கையால தண்ணி ஊத்துவோம். அதுக்கப்புறம் 3வது நாள்ள பாசனம் செய்வோம். அதேமாதிரி தொடர்ச்சியா பாசனம் செய்வோம். 15வது நாள்ல களைக்கொத்து வச்சி களை வெட்டுவோம். 30வது நாள்ல 2வது களை எடுப்போம். 45வது நாள்ல 3வது களையெடுத்துட்டு ஊடுபயிரா மல்லாட்டை இல்லன்னா உளுந்தை விதைப்போம்.
ஒரு வருசத்துல சவுக்கு மரங்கள்ல கவாத்து பண்ணுவோம். அதாவது 4 அடி உயரத்துக்கு கீழ வர்ற பக்க கிளைகளை அகற்றுவோம். கவாத்து செஞ்ச உடனே 17:17:17 காம்ப்ளக்ஸ் உரத்தை ஏக்கருக்கு 2 மூட்டைன்னு பாசன தண்ணியில கலந்து விடுவோம். 36வது மாசத்துல அதாவது 3வது வருசத்துல மரங்கள் அறுவடைக்கு தயாராகிவிடும். அப்போ நாங்க டிஎன்பிஎல் கம்பெனிகாரங்க கிட்ட சொல்லுவோம். அவங்க வந்து மரங்களை அறுவடை பண்ணிக்கிட்டு போயிடுவாங்க. போகும்போதே பக்கத்துல இருக்குற வெயிட் பிரிட்ஜ்ல வெயிட் போடுவாங்க. அப்புறமா அவங்க கம்பெனில வெயிட் போட்டு பார்ப்பாங்க. வெயிட்டுக்கு ஏத்த அமவுண்டை நமக்கு கொடுத்துடுவாங்க. ஒரு ஏக்கர்ல 3 வருசத்துல 55ல இருந்து 70 டன் வரைக்கும் சவுக்கு மரம் கிடைக்கும். சராசரியா 60 டன் வரைக்கும் கிடைக்கும்.
ஒரு டன்னுக்கு 8,100 ரூபாய் விலையாக கொடுக்குறாங்க. இதன்மூலமா 4 லட்சத்து 86 ஆயிரம் ரூபாய் வருமானம் கிடைக்கும். சவுக்கு கன்று நடவு பண்ற செலவுப்பணத்தை ஊடுபயிர் வருமானத்துலயே எடுத்துறலாம். மற்ற வேலைகளுக்கு 86 ஆயிரம் ரூபாய் போனாலும் 4 லட்சம் சுளையா லாபம் கிடைக்கும். எப்படி பார்த்தாலும் மூன்றரை லட்சத்தை லாபமாக எடுக்கலாம். 4 வருசம் கழிச்சி அறுவடை செஞ்சா 100 டன் மரம் கிடைக்கும். அப்படி கிடைச்சா 8 லட்சம் வரைக்கும் வருமானம் கிடைக்கும். ஆனா நாங்க 3 வருசத்துலயே வெட்டிடுவோம். என்னோட 8 ஏக்கர்ல மாத்தி மாத்தி சவுக்கு போட்டுக்கிட்டே இருப்போம். அதனால சவுக்கு மூலமாக தொடர்ந்து வருமானம் பார்க்குறோம்’’ என மகிழ்ச்சியாக தெரிவித்தார்.
தொடர்புக்கு:
ராம்பாபு: 90259 82479.
போஸ்ட்டுக்கு விற்பனை
கட்டுமானப்பணி உள்ளிட்ட பணிகளுக்காக சவுக்கு மரங்களை போஸ்டாக வாங்கி செல்பவர்களும் இருக்கிறார்கள். இந்தப் பகுதியில் பொதுவாக பாம்பே போஸ்ட், கோயம்புத்தூர் போஸ்ட், திருச்சி போஸ்ட் என 3 வகைகளில் வியாபாரிகள் சவுக்கு மரங்களை வாங்கிச் செல்கிறார்கள். அவர்கள் கொஞ்சம் கூடுதலாகவே விலை கொடுத்து வாங்குவதாகவும் தெரிவிக்கிறார்கள். ஆனால் அனைத்து மரங்களையும் ஒட்டுமொத்தமாக கொள்முதல், குறித்த தேதியில் அறுவடையுடன் பணம் பட்டுவாடா போன்ற காரணங்களால் டிஎன்பிஎல்லுக்கு விற்பனை செய்ய ஆர்வம் காட்டுகிறார்கள் விவசாயிகள்.
