முயல் வளர்ப்பில் இரண்டு அனுகூலங்கள் உண்டு. ஒன்று கவர்ச்சிகரமான செல்லப்பிராணி என்பதால் அதனை வாங்கி வளர்ப்பவருக்கு, கவலைகள் மறந்து மனது லேசாகும். இன்னொன்று இதை இறைச்சிக்காக பலதரப்பினரும் வாங்கிச் செல்வதால் நல்ல வாரம்தோறும் நிச்சய வருமானம். இதுபோன்ற காரணங்களால் முயல் வளர்ப்பு ஒரு லாபகரமான தொழிலாகவே பார்க்கப்படுகிறது. அந்த வகையில் கடந்த 30 ஆண்டுகளாக முயல் வளர்ப்பில் ஈடுபட்டு வரும் காஞ்சிபுரத்தைச் சேர்ந்த காளத்தி என்பவரின் சில அனுபவங்களைக் கடந்த இதழில் தெரிவித்திருந்தார். முயல்களுக்கான பாதுகாப்பு முறைகள், விற்பனை வாய்ப்பு உள்ளிட்ட தகவல்கள் குறித்து இந்த இதழில் பகிர்ந்துகொள்கிறார்.
“ ஆண் முயலையும் பெண் முயலையும் தனியாத்தான் வைக்கணும். ரெண்டும் ஒன்னா இருந்தா எப்ப இணைகூடுது எப்ப குட்டிபோடுதுன்னு நமக்குத் தெரியாது. இணைகூடுறதுக்கு சாயந்திரம் 6 மணிக்கு மேல ஒரே கூண்டுல போடுறது நல்லது. இரவெல்லாம் கூட விடலாம். அடுத்த நாள் ரெண்டையும் தனித்தனி கூண்டுல விடணும். அன்னையிலர்ந்து 30வது நாள் குட்டி போட்டுடும். ஒரே நேரத்துல 6லர்ந்து 7 குட்டிகள் போடும். ஒரு குட்டியோட எடை 30 கிராம் இருக்கும். தாய்முயலுக்கு தரமா நல்ல உணவு குடுத்தா, அதுங்க குட்டிங்களுக்கு நல்லா பால் குடுக்கும். பாலூட்டும் முயல்களுக்கு அம்மான் பச்சரிசி கீரை, வெந்தயப்பொடி, அரைக்கீரை இதெல்லாம் குடுத்தா பால் சுரப்பு அதிகமா இருக்கும். பால் சுரப்பே இல்லன்னா கால்நடை மருத்துவர் சொல்ற மாத்திரையை குடுக்கணும். குட்டிங்க நல்லா பால் குடிச்சா ஆரோக்கியமா வளரும். ஆரோக்கியமான
குட்டிகளை 50வது நாள் தாய்கிட்ட இருந்து பிரிச்சோம்ன்னா, குட்டிங்க தானாவே தீவனம் உண்ணத் தொடங்கிடும்.
குட்டியிலர்ந்து நல்லா வளந்து வர்றதுக்கு 4 மாசம் ஆகும். 4 மாசம் முடியும்போது அதோட எடை 2 கிலோ இருக்கும்.”முயல் வளர்ப்பில் வெப்பநிலை முக்கியமானது அது குறித்துப் பேசிய சுந்தரகாளத்தி “முயல்கள் குளிர்காலத்த தாங்கிக்கும். ஆனா, வெயில்காலத்துல அதுக்கு அயற்சி நோய் வரும். சோர்ந்து போயிடும். பண்ணை குளிர்ச்சியா இருந்தா அந்த பிரச்சனை வராது. எலுமிச்சை சாறு, குளுக்கோஸ் எல்லாம் கலந்த குடிநீர் வச்சா வெப்பத்தோட தாக்கம் குறையும். ஓலைக்குடிசை போட்டிருந்தா வெப்பம் குறைவா இருக்கும். ஃபாகர் எனும் நீர்த்துகள் தூவும் அமைப்பு இருந்தா குளூமையா இருக்கும். இந்த ரெண்டும் இல்லன்னா, முயல் கூண்டுக்கு மேல அரிசிமூட்டை வர்ற சணல் கோணியை நனைச்சிட்டு, ஈரம் சொட்டாத அளவுக்கு ஈரப்பதத்துல கூண்டுமேல போட்டா, முயல்களை வெப்பம் தாக்காம காக்கலாம். நான் இந்த ஈரக்கோணி முறையைத்தான் பயன்படுத்தறேன். முயல்களுக்கு நோய் வந்தா எப்டி பாதுகாக்கணும்ன்றத பத்தி சயின்ட்டிஸ்ட் வந்து சொல்லிக் குடுக்கறாங்க. இதனால முயல்களோட இறப்பு விகிதம் 6 ல இருந்து ஒன்னுன்னு குறஞ்சிருக்கு. பண்ணை வேலையை எல்லாம் நானே பாத்துக்கறேன். ஒரு ஆளே ஆயிரம் முயல்களை வளர்க்கலாம்” என்றார்.
``முயல் விற்பனைக்கு ஒன்றிய அரசின் அனுமதியோடு உறுப்பினர் சான்றிதழ் வாங்கி இருக்கோம். முயல் இறைச்சியை தமிழ்நாடு முயல் உற்பத்தியாளர் வளர்ச்சி சங்கம் கிலோ 450 ரூபாய்க்கு எடுத்துக்குது. அதுக்கு அவங்க சொல்ற முறைல கரெக்ட்டா வளக்கணும். அவங்க சொல்ற உணவுதான் குடுக்கணும். ஹோட்டல்களுக்கு நாங்களே முயலை கறியாக்கிக் குடுக்கறோம். வெட்டுற செலவோட சேர்த்து கறியா குடுக்கும்போது கிலோ 550 ரூபாய்க்கு குடுக்கறோம். முயல்கறி பத்தி மக்களுக்கு இப்போ நெறய தெரியிறதால, வீட்ல சமைக்க 1 கிலோ, 2 கிலோ வாங்குற வாடிக்கையாளர்களும் இருக்காங்க. தமிழ்நாட்டோட முயல்கறி தேவையில 35% மட்டுந்தான் இப்போ குடுக்க முடியுது. அரசே முயல்கறி பத்தி பரப்புரை செய்றதால நெறய பேர் முயல்கறி வாங்கறாங்க. இன்னமும் முயல்கறிக்கு நெறய தேவை இருக்கு” என சந்தை நிலை பற்றி விளக்கினார்.“முயலோட விற்பனையை பொறுத்துதான் வருவாய். 100 முயல்களை வளர்த்தா தீவனம், கூலி, கறி வெட்டும் செலவுலாம் போக மாசத்துக்கு 20 ஆயிரம் ரூபாய் நிகர லாபம் பார்க்கலாம்” என வருவாய் பற்றி கூறி விடை கொடுத்தார்.
தொடர்புக்கு:
சுந்தரகாளத்தி: 89402 53945.
தீவனம், பராமரிப்பு, நேர நிர்வாகம் உள்ளிட்ட காரணங்களால் தற்போது மாதத்திற்கு 100 முயல்களை வளர்த்து ரூ.20 ஆயிரம் லாபம் பார்த்து வருகிறார். இதையே அவர் இரண்டு, மூன்று மடங்கு அதிகமான முயல்களை வளர்க்கும் பட்சத்தில் இன்னும் கூடுதலாக லாபம் பார்க்க வாய்ப்பு இருக்கிறது.
