திருவெறும்பூர்: திருச்சியில் உள்ள ஒரு தனியார் இன்ஜினியரிங் கல்லூரியில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இதில் முதலாமாண்டு படித்து வரும் 17 வயது மாணவி ஒருவர் மணிகண்டம் ேபாலீசில் அதே கல்லூரியில் பணிபுரியும் ஒரு பேராசிரியர் மீது பாலியல் புகார் அளித்தார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது: கல்லூரியில் இசிஇ துறை பேராசிரியராக கே.கே.நகரை சேர்ந்த தமிழ்(52) பணியாற்றி வருகிறார். கடந்த 13ம் தேதி ஆய்வகத்தில் மாணவிகளுடன் நான் இருந்தபோது பேராசிரியர் என்னை கையால் சைகை காட்டி அவரது அறைக்கு அழைத்தார். அங்கு சென்றபோது பேராசிரியர் செல்போன் இல்லையா, நான் வாங்கி தருகிறேன் என்று கூறி திடீரென என்னை கட்டிப்பிடித்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த நான் பிடியிலிருந்து விலகி அவரை தள்ளி விட்டேன். பின்னர் உன் இன்னர் சைஸ் என்ன என்று கேட்டு மீண்டும் கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்தார். உடனே அவரை தள்ளி விட்டு விட்டு தப்பி வந்தேன்.
இதுகுறித்து கல்லூரி நிர்வாகம் மற்றும் வகுப்பு பேராசிரியரிடம் புகார் தெரிவித்தேன். அவர்கள் கண்டுகொள்ளவில்லை. எனவே பேராசிரியர், வகுப்பு பேராசிரியர், உதவி முதல்வர் ஆகிய 3 பேர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளார்.
இந்த பாலியல் புகார் திருவெறும்பூர் அனைத்து மகளிர் போலீசுக்கு மாற்றப்பட்டது. இதுதொடர்பாக போலீசார் நேற்று கல்லூரிக்கு சென்று விசாரித்தனர். மேலும் அங்குள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். இதில் பேராசிரியர் மாணவியை அழைத்து பேசுவது பதிவாகியிருந்தது. இதையடுத்து போக்சோ வழக்கு பதிந்து பேராசிரியர் தமிழை நேற்றிரவு கைது செய்தனர்.