Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

உயர்வு தரும் உற்பத்தி மையங்கள்!

உயிரிப்பூச்சிக்கொல்லி தொடர்பான சில தகவல்களை கடந்த இதழில் கண்டோம். அதன் தொடர்ச்சியாக சில முக்கிய தகவல்களை இந்த இதழில் பார்ப்போம்.உயிரிப்பூச்சிக் கட்டுப்பாட்டு மையம் அமைக்க சில அடிப்படைத் தேவைகள் உள்ளன. அவற்றில் நிலம், கட்டிடம், உபகரணங்கள், மூலப்பொருட்கள், மின் ஆற்றல் உள்ளிட்டவை மிகவும் அவசியம். இதுகுறித்து கொஞ்சம் விரிவாக பார்ப்போம்.

நிலம்

பூச்சிகளை வளர்க்கும் அறை, ஆய்வுக்கூடம் மற்றும் அலுவலகம் அமைக்க நிலம் இன்றியமையாதது. அதை நாம் முதலில் தேர்ந்தெடுக்க வேண்டும்.

கட்டிடம் மற்றும் கட்டிட வேலைகள்

உயிரிப்பூச்சிக்கொல்லி உற்பத்தியில் பூச்சிகளே வளர்க்கப்படுகின்றன. ஆகையால், அடிப்படை உள்கட்டமைப்புகள் எவ்வித மாசும் இல்லாமல் சுற்றுச்சூழல் தூய்மையாக இருக்க வேண்டும். மையங்கள், தொழிற்சாலைகளின் அருகிலே அமைக்கக்கூடாது. மின்சாரம், நீர் மற்றும் போக்குவரத்து வாகனம் ஆகியவை பிற தேவைகளாகும். இவற்றுடன் சேர்ந்து, உணவுத் தயாரிப்பு, கார்சிரா உற்பத்தி, முட்டை உற்பத்தி மற்றும் வளர்ப்பு முறை உற்பத்தி ஆகியவற்றிற்காக தனித்தனி அறைகள் தேவைப்படும். என்பி வைரஸ் உற்பத்தி அறை மட்டும் அதிக சுகாதாரத்தோடு சற்று தூரத்தில் மாசுபடாதவாறு அமைக்க வேண்டும்.

உபகரணங்கள் மற்றும் இயந்திரங்கள்

அலமாரி மற்றும் நெகிழித் தட்டு போன்ற சாதனங்கள் பூச்சி வளர்ப்பிற்கு தேவைப்படுகின்றன. இதைத் தவிர இயந்திரம் மற்றும் பிற உபகரணங்கள் பூச்சியைச் சேகரிக்கவும், வளர்க்கவும் தேவைப்படுகிறது. டிரைக்கோடெர்மாவை உற்பத்தி செய்ய லாமினார் ஃபலோ என்ற கருவி தேவைப்படும்.

மூலப்பொருட்கள்

பூச்சி உற்பத்திக்கு பயறுவகைப் பயிர்கள், விட்டமின்கள், எதிர்ப்பு சக்தி பொருட்கள் உள்ளிட்ட மூலப்பொருட்கள் தேவை. டிரைக்கோடெர்மா தயாரிப்பிற்கு, கரும்புச் சக்கை மற்றும் ஈஸ்ட் ஊடகம் தேவைப்படுகிறது. இவையாவும் உள்ளூரிலேயே கிடைக்கக்கூடியவை.

தண்ணீர்

பூச்சி உற்பத்திக்கான சில பொருட்களைத் தயாரிக்கவும், அவற்றை கழுவி சுத்தம் செய்யவும் தண்ணீர் அவசியம். உபயோகிக்கும் முன் நீரின் தரத்தினை பரிசோதித்து உபயோகிக்க வேண்டும்.

மின்ஆற்றல்

உயிரிப் பூச்சிக்கொல்லி உபயோகத்திற்கு மின்சாரம் மிக அவசியம். எனவே மின்சார வசதியை முதலில் ஏற்படுத்திக்கொள்ள வேண்டும்.

மனித ஆற்றல்

எந்தவொரு செயலுக்குமே மனித ஆற்றல் முக்கியம். உயிரிப்பூச்சிக்கொல்லி உற்பத்திக்கு பயிற்சி பெற்ற திறமையான வேலையாட்கள் மிக அவசியம். ஒவ்வொரு காலக்கட்டத்திற்கும், வெவ்வேறு எண்ணிக்கையிலான ஆட்கள் தேவை.

உற்பத்தி அளவு

உயிரி பூச்சிக்கொல்லிகளை பெரு மற்றும் சிறுதொழில் மூலம் உற்பத்தி செய்யலாம். கிராமப்புறங்களில் சிறுதொழில் உற்பத்தி மூலம் உள்ளூர் தேவைகளைப் பூர்த்தி செய்யலாம். உயிரி பூச்சிக்கொல்லி உற்பத்தி செய்யும் முறை மிகவும் எளிதானது என்பதால் விவசாயிகள் மட்டுமின்றி சுய உதவிக்குழு உறுப்பினர்களும் முறையான பயிற்சி பெற்று உயிரி பூச்சிக்கொல்லிகளை உற்பத்தி செய்யலாம். நிறுவனங்கள், கரும்பு ஆலைகள், கூட்டுறவு அமைப்புகள் (வேளாண் இடுபொருட்கள் உற்பத்தி செய்யும் அமைப்புகள்) நடுத்தர மற்றும் பெரிய அளவில் உற்பத்தி செய்து வினியோகிக்கலாம். உதாரணமாக தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் வணிக வளம் கொண்ட உரத்தொழிற்சாலைகள், பெரிய அளவில் உயிரி பூச்சிக்கொல்லிகளை உற்பத்தி செய்யலாம். அதுபோல், விதை உற்பத்தி நிறுவனங்கள் டிரைக்கோ டெர்மா உற்பத்தி செய்து வினியோகிக்கலாம்.

வணிக வளம் மற்றும்வாய்ப்புகள்

அளவுக்கு அதிகமான பூச்சிக்கொல்லி உபயோகத்தால் ஏற்பட்ட விளைவுகள், அங்கக வேளாண்மையின் முக்கியத்துவம், இன்றைய வேளாண் துறையின் அதீத வளர்ச்சி ஆகியவை உயிரி பூச்சிக்கொல்லி உற்பத்தி நிறுவனங்களுக்கு நல்ல வாய்ப்பை வழங்கும் காரணியாக விளங்குகின்றன. குறிப்பாக, மஹாராஷ்டிரா, குஜராத், ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், தமிழ்நாடு, மேற்கு வங்காளம் மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களில், கரும்பு, துவரை, தானியப் பயிர்கள் மற்றும் காய்கறிப் பயிர்கள் சாகுபடியில் உயிரி பூச்சிக்கொல்லிகள் பெரிய அளவில் உபயோகிக்கப்படுகின்றன. மேலும் இவற்றின் தேவை அதிகரித்தபடியே இருக்கிறது. எனவே உயிரி பூச்சிக்கொல்லிகளை உற்பத்தி செய்தால் அவற்றை எளிதாக சந்தைப்படுத்தலாம். மேற்கூறிய அடிப்படை வசதிகளை உறுதி செய்து உயிரி பூச்சிக்கொல்லி உற்பத்தியில் துணிந்து இறங்கலாம். இதன்மூலம் உற்பத்தியாளருக்கும், உபயோகிப்பாளர்களுக்கும் கிடைக்கும் அனுகூலம் சிறந்ததாகவே இருக்கும்.