கொள்முதல் செய்யும் நெல்லை உடனடியாக சேமிப்பு கிடங்குக்கு கொண்டு செல்ல வேண்டும்: கலெக்டர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு
சென்னை: மழை காலங்களில் டெல்டா மாவட்டங்களுக்கு வேறு மாவட்டங்களில் இருந்து கூடுதல் அலுவலர்களை அனுப்பி, கொள்முதல் செய்யப்படும் நெல்லை உடனடியாக அரவை ஆலைகள் மற்றும் சேமிப்பு கிடங்குகளுக்கு கொண்டு செல்லும் பணிகளை துரிதப்படுத்த வேண்டும் என்று கலெக்டர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். சென்னை, முகாம் அலுவலகத்தில் இருந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்று காணொலிக் காட்சி வாயிலாக நாகப்பட்டினம், திருவாரூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், கடலூர், திருச்சி மற்றும் அரியலூர் ஆகிய டெல்டா மாவட்ட கலெக்டர்களுடன் நெல் கொள்முதல், சேமிப்பு, இருப்பு, நகர்வு, அரவை மற்றும் உரங்கள் இருப்பு தொடர்பான ஆலோசனை கூட்டம் நடந்தது.
இந்த அரசு பொறுப்பேற்றவுடன், மழைக்காலங்களில் விவசாயிகள் பாடுபட்டு உற்பத்தி செய்த நெற்பயிர்கள் பாதிக்கப்பட கூடாது என்ற நோக்குடன் அதிக அளவில் நெல் சேமிப்பு கிடங்குகளை கட்டிவருகிறது. அதன்படி, இதுவரை நெல் மணிகளை பாதுகாத்திட 4.03 லட்சம் மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட மேற்கூரையுடன் கூடிய நவீன நெல்சேமிப்பு தளங்கள் கட்டப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் 2024-25 நெல் கொள்முதல் பருவத்தில் முன் எப்போதும் இல்லாத அளவு சாதனையாக 47.99 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.
கடந்த 2024-25 கொள்முதல் பருவத்தில் செப்டம்பர் மாதத்தில் நாகப்பட்டினம், திருவாரூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், கடலூர் ஆகிய 5 டெல்டா மாவட்டங்களில் 1.27 லட்சம் மெட்ரிக் டன் கொள்முதல் செய்யப்பட்டது. ஆனால், இந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் இந்த மாவட்டங்களில் மட்டும் 3.20 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு இந்த ஆண்டு உற்பத்தி பெருமளவு அதிகரித்துள்ள காரணத்தினால் விவசாயிகளிடம் இருந்து எவ்வித தாமதமுமின்றி நெல் கொள்முதல் செய்யப்பட வேண்டும், அதேசமயம் கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் விரைவாகவும், பாதுகாப்பாகவும் சேமிப்பு கிடங்குகளுக்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும் என்ற முக்கிய நோக்கத்துடன் இந்த ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது.
கூட்டத்தில், மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டுள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களின் எண்ணிக்கை, இருப்பு, சேமிப்பு, நகர்வு, கிடங்கு வசதி மற்றும் உரங்கள் இருப்பு ஆகியவை குறித்து மாவட்ட ஆட்சி தலைவர்களிடம் முதல்வர் கேட்டறிந்தார். கொள்முதல் செய்யப்படும் நெல் மூட்டைகளை சேமிக்க தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் சேமிப்பு கிடங்குகள் மட்டுமின்றி, வேளாண் துறையின் கீழ் வரும், வேளாண் விற்பனை துறை சேமிப்பு கிடங்குகளையும், வேளாண் உற்பத்தி துறையில் உள்ள ஒரு லட்சம் மெட்ரிக் டன் கிடங்கு வசதியினையும், வேறு பல துறைகளின் கிடங்குகளையும் தேவைப்படும் இடங்களில் பயன்படுத்திக்கொள்ளவும், கொள்முதல் செய்யப்படும் நெல் உடனடியாக அரவை ஆலைகள் மற்றும் சேமிப்பு கிடங்குகளுக்கு கொண்டு செல்லும் பணிகளை துரிதப்படுத்த வேண்டும் என்றும் முதல்வர் அறிவுறுத்தினார்.
டெல்டா மாவட்டங்களின் நெல் கொள்முதல் நிலையங்கள் மற்றும் கிடங்குகளில் இருந்து கூடுதல் ரயில்வே வேகன்கள் மூலம் பிற மாவட்டங்களுக்கு விரைந்து நெல் மூட்டைகளை அனுப்பிடவும் அறிவுறுத்தினார். மழைக்காலங்களில் கூடுதல் கவனத்துடன் நெல் கொள்முதலை சிறப்பாக செய்திடவும், உரத் தேவையை நிறைவு செய்திடவும், நெல் சேமிப்பு மற்றும் நகர்வை துரிதப்படுத்தவும், டெல்டா மாவட்டங்களின் ஆட்சி தலைவர்கள் மற்றும் வேளாண்மை துறை அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்பட்டனர். இந்த கூட்டத்தில் அமைச்சர்கள் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், அர.சக்கரபாணி, டி.ஆர்.பி.ராஜா, மாவட்ட ஆட்சி தலைவர்கள் ஆகாஷ் (நாகப்பட்டினம்), மோகனச்சந்திரன் (திருவாரூர்), ஹெச்.எஸ்.காந்த் (மயிலாடுதுறை), பிரியங்கா பங்கஜம் (தஞ்சாவூர்), ஆதித்யா செந்தில்குமார் (கடலூர்), சரவணன் (திருச்சி), ரத்தினசாமி (அரியலூர்) மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.