சென்னை: தமிழ் தலைவாஸ் அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக சஞ்சீவ் பலியான், உதவி பயிற்சியாளராக சுரேஷ்குமார் ஆகியோர் பொறுப்பு ஏற்றுள்ளனர். சஞ்சீவ் பயிற்சியின் கீழ் 3வது சீசனில் பாட்னா பைரரேட்ஸ், 9வது சீசனில் ஜெய்பூர் பிங்க் பேந்தர்ஸ் அணிகள் சாம்பியன் பட்டம் வென்றுள்ளன. எனவே தலைவாஸ் அணியின் பயிற்சியாளராக சஞ்சீவ் பொறுப்பு ஏற்றிருப்பது கூடுதல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் பயிற்சிக்கிடையில் பேசிய சஞ்சீவ், ‘ இதுவரை இல்லாத அளவுக்கு புதிய இலக்குகள், திட்டங்களுடன் தலைவாஸ் அணி இந்த சீசனில் களம் காண இருக்கிறது. அதற்காக ஆல்ரவுண்டர் பவன் ஷெராவத் தலைவாஸ் அணியில் இணைந்ததுடன் மீண்டும் கேப்டனாக பொறுப்பு ஏற்றுள்ளார். அவருக்கு துணையாக அதிரடி ரெய்டர் அர்ஜூன் தேஷ்வால் துணைக் கேப்டனாக அணியை வழி நடத்த இருக்கிறார்.
இருவரும் பாடி புள்ளிகளை குவிப்பதில் வல்லவர்கள். அதனால் இந்த சீசனில் தலைவாஸ் அணியை தாங்கும் தூண்களாக இருவரும் இருப்பார்கள். ஈரானிய டிஃபென்டர் அலிரேசா கலிலி, ஹிமான்சு யாதவ், ஆஷிஷ், நிதேஷ்குமார் ஆகியோர் எதிரணி வீரர்களை கிடுக்கிப்பிடி ேபாட்டு புள்ளிகளை சேர்ப்பார்கள். தலைவாஸ் அணியில் புதிய, திறமையான வீரர்கள் இடம் பெற்றிருப்பதால் இந்த முறை தலைவாஸ் ரசிகர்களுக்கு பெரும் விருந்து காத்திருக்கிறது’ என்றார்.