பெரம்பலூர் மாவட்ட பள்ளிகளில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு ஏற்படுத்திய சிறந்த குழுக்களுக்கு பரிசு
*முதல்பரிசாக ரூ.15,000 வழங்கி கலெக்டர் பாராட்டு
*151 பள்ளிகள், 40 கல்லூரிகளில் குழுக்கள் அமைப்பு
பெரம்பலூர் : போதைப் பொருட்கள் இல்லாத தமிழ்நாடு தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சிகளில் சிறப்பாக செயல்பட்ட பள்ளி, கல்லூரிகளின் போதைப்பொருள் ஒழிப்பு குழுக்களுக்கு பரிசுகள், பாராட்டுச் சான்றிதழ்களை கலெக்டர் கிரேஸ் பச்சாவ் வழங்கினார்.
பெரம்பலூர் மாவட்டக் கலெக்டர் அலுவலகத்தில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை மூலம் போதைப் பொருட்கள் இல்லாத தமிழ்நாடு எனும் கருத்தை மையமாகக் கொண்டு, போதைப் பொருட்களுக்கு எதிராக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் போதைப்பொருட்கள் ஒழிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றின் மூலம் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.
இதில் சிறப்பாக செயல்பட்ட போதைப் பொருட்கள் ஒழிப்பு குழுக்களுக்கு (ANTI DRUG CLUB) பரிசுத்தொகை மற்றும் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று(25ஆம் தேதி) நடைபெற்றது. பெரம்பலூர் மாவட்ட எஸ்பி ஆதர்ஷ் பசேரா முன்னிலை வகித்தார்.
சிறப்பாக செயல்பட்ட போதைப் பொருட்கள் ஒழிப்பு குழுக்களுக்கு பெரம்பலூர் மாவட்டக் கலெக்டர் கிரேஸ் பச்சாவ் பரிசுத்தொகை மற்றும் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கினார். முதல் பரிசாக ₹15,000, 2ஆம் பரிசாக ரூ.10,000, 3ஆம் பரிசாக ரூ.5,000க்கான காசேலைகளும் பாராட்டுச் சான்றிதழ்களும் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கான பிரிவுகளுக்கு தனித் தனியே வழங்கப்பட்டது.
தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய கலெக்டர், போதையில்லாத தமிழ்நாடு உருவாகிடும் வகையில் தமிழ்நாடு முதலமைச்சர் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களிடம் போதைப்பொருள் தொடர்பான உறுதி மொழி ஏற்பு, போதைப் பொருள் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகளை விளக்கும் வகையில் பொதுமக்கள் மற்றும் மாணவர்களுக்கு பல்வேறு விழிப்புணர்வு நிகழச்சிகளை மேற்கொள்ள அறிவுறுத்தியுள்ளார்.
அதனடிப்படையில், பெரம்பலூர் மாவட்டத்தில் போதைப் பொருட்களுக்கு எதிராக விழிப்புணர்வு ஏற்படுத்திடும் வகையில் 151 மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் 40 கல்லூரிகளில் போதைப் பொருட்கள் ஒழிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.அதன் மூலமாக ஓவியம் வரைதல், பேச்சுப்போட்டி, கருத்தரங்கம், பட்டிமன்றம், சைகை விழிப்புணர்வு நாடகங்கள் உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு பணிகள் மேற்கொள்ளப் பட்டன.
மேலும், போதைப் பொருட்கள் மற்றும் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் நடமாட்டம் குறித்து தங்களுடைய சுய விபரங்களின்றி புகார் செய்வதற்கு ஏதுவாக தமிழ்நாடு அரசால் DRUG FREE TN மொபைல் செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த செயலியின் சிறப்பு என்னவென்றால் போதைப் பொருட்கள் விற்பனை குறித்த விபரங்களை தெரிவிப்பவரின் தகவல் கோரப்படாது.
இந்த செயலி மிகவும் பாதுகாப்பானது. இதனை மாணவர்கள் கண்டிப்பாக தங்களுடைய அலைபேசி மற்றும் பெற்றோர்களின் அலைபேசியில் பதிவிறக்கம் செய்து கொண்டு, போதை பொருட்கள் பயன்பாடு தொடர்பான புகார்களை தெரிவிக்கலாம்.
போதைப்பொருட்கள், பான், குட்கா, கஞ்சா, சட்டவிரோத சாராயம் உள்ளிட்ட பொருட்களை விற்பனை செய்வோர் அல்லது பயன்படுத்துவோர் குறித்து உங்களுக்கு தகவல் தெரிந்தால் இந்த மொபைல் செயலியில் அவர்கள் பற்றிய தகவல்களையும், புகைப் படங்கள் உள்ளிட்ட ஆவணங்கள் இருந்தால் அவற்றையும் பதிவேற்றம் செய்தால், உடனடியாக சென்னையில் உள்ள கட்டுப்பாட்டு அறையில் இருந்து சம்பந்தப்பட்ட மாவட்டக் கலெக்டர் மற்றும் மாவட்ட எஸ்பிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு போர்க்கால அடிப்படையில் போதைப் பொருட்களின் பயன்பாடு தடுத்து நிறுத்தப்படும் எனத் தெரிவித்தார்.
முன்னதாக, போதைப் பொருட்கள் இல்லாத தமிழ் நாடு தொடர்பாக போதைப் பொருட்கள் ஒழிப்பு குழுக்களால் (ANTI DRUG CLUB) நடத்தப்பட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் குறித்த புகைப்படக் கண்காட்சியை கலெக்டர், மாவட்ட எஸ்பி ஆகியோர் பார்வையிட்டனர்.
இந்த நிகழ்ச்சியில் பெரம்பலூர் மாவட்ட ஏடிஎஸ்பி (மது விலக்கு) பாலமுருகன், முதன்மை கல்வி அலுவலர் முருகம்மாள், கலால் உதவி ஆணையர்(பொ) சிவா, வேப்பந்தட்டை அரசு கலைக்கல்லூரி முதல்வர் சேகர் மற்றும் பல்வேறு அரசுஅலுவலர்கள், போதை எதிர்ப்பு மன்றத்தினர் கலந்து கொண்டனர்.