தனியார் பள்ளி ஆசிரியர்களையும் பணிகளில் பயன்படுத்த வேண்டும்: தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம் வலியுறுத்தல்
சென்னை: தமிழ் திறனறித் தேர்வில் தனியார் பள்ளி மாணவர்களும் பங்கு கொள்வதால் தனியார் பள்ளி ஆசிரியர்களையும் கண்காணிப்பு பணிகளில் பயன்படுத்த வேண்டுமென தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம் வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து அந்த அமைப்பின் பொதுச் செயலாளர் அன்பழகன் வெளியிட்ட அறிக்கை: தமிழக பள்ளி மாணவர்களின் உதவித் தொகைக்கான தமிழ் திறனறித் தேர்வு அக்டோபர் 11ம் தேதி நடைபெற உள்ளது. தொடர்ந்து மறுநாள் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலமாக முதுநிலை ஆசிரியர் பணிக்கான போட்டித் தேர்வு அக்டோபர் 12ம் தேதி (நாளை) நடத்தப்பட உள்ளது. இவ்விரு தேர்வுகளின் கண்காணிப்பு பணிகளிலும் முதுநிலை ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
இவ்வாறு 2 விடுமுறை நாட்களில் பணிபுரிவதால், தொடர்ந்து 14 நாட்கள் ஓய்வின்றி பணியாற்றும் நிலை உருவாகியுள்ளது. இது ஆசிரியர்களின் உடல்நிலையை மட்டுமின்றி மனநிலையையும் சோர்வாக்கும். மேலும், பொதுத்தேர்வுக்கு மாணவர்களை தயார்படுத்தி வரும் சூழலில் இந்த பணிச்சுமை கற்பித்தலில் பின்னடைவை ஏற்படுத்தும். எனவே, இந்த நிலையை மாற்றுவதற்கு பள்ளிக்கல்வித் துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அதேபோல், தமிழ் திறனறித் தேர்வில் தனியார் பள்ளி மாணவர்களும் பங்கு கொள்வதால் தனியார் பள்ளி ஆசிரியர்களையும் கண்காணிப்பு பணிகளில் பயன்படுத்த வேண்டும். அதனுடன் 2 நாட்கள் தேர்வில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு ஈடுசெய்யும் விடுப்பும் வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.