தனியார் பள்ளிகளின் கட்டிடங்களை வரைமுறைபடுத்தி நிரந்தர அங்கீகாரம் குறித்து முடிவெடுக்க கல்வித்துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு
சென்னை: தனியார் பள்ளிகளின் கட்டிடங்களுக்கு டிடிசிபி மற்றும் சிஎம்டிஏ அனுமதி பெறுவது குறித்து பள்ளிகளின் விண்ணப்பத்தை பரிசீலித்து உரிய உத்தரவு பிறப்பிக்குமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அகில இந்திய தனியார் கல்வி நிறுவனங்களில் சங்கத்தின் பொதுச்செயலாளர் கே.பழனியப்பன் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், தனியார் பள்ளிகள் 2025 மே 31ம் தேதிக்குள் கட்டிய கட்டிடங்கள் அனைத்தையும் வரைமுறைப்படுத்தி அந்த கட்டிடங்களுக்கு டிடிசிபி மற்றும் சிஎம்டிஏ அனுமதி பெறுவதில் விலக்கு அளித்து அந்த பள்ளிகளுக்கு தொடர் அங்கீகாரங்களை வழங்க வேண்டும். கட்டிடங்களுக்கு அனுமதி கொடுக்குமாறும் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம் வழங்க கோரி தமிழக கல்வித்துறைக்கும், தனியார் பள்ளிகளின் இயக்குநருக்கும் மனு கொடுத்தோம்.
இதையடுத்து, மனுதாரர்கள் விண்ணப்பங்களை நகர் ஊரமைப்பு ஆணையத்திடம் குறிப்பிட்ட காலத்திற்குள் தரவேண்டும். அந்த விண்ப்பங்களின் நகல்களை அரசிடம் சமர்பித்து பள்ளியின் அங்கீகாரத்தை நீட்டித்துக்கொள்ளலாம் என்று தமிழக அரசு கடந்த 2022ல் அரசாணை பிறப்பித்தது. ஆனால், எங்கள் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம் தராமல் தற்காலிக அங்கீகாரம் தரப்பட்டுள்ளது. எனவே, எங்களது விண்ணப்பங்களை பரிசீலித்து 2025 மே 31வரை கட்டப்பட்ட கட்டிடங்களை வரைமுறை படுத்தி பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம் வழங்குமாறு உத்தரவிட வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது.
இந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, அங்கீகாரம் மற்றும் கட்டிட வரைமுறை தொடர்பான குழப்பம் ஏற்படுத்துவதை தவிர்க்கும் வகையில் பள்ளிகள் தனித்தனியாக கல்வித்துறைக்கு விண்ணப்பங்கள் அளித்துள்ளன. அனைத்து வகை தனியார் பள்ளிளின் கட்டிடங்களுக்கு அனுமதி பெறுவதில் விலக்கு அளித்து பள்ளியின் தொடர் அங்கீகாரங்களை வழங்க வேண்டும் என்று தனியார் பள்ளிகளின் இயக்குநர் அரசுக்கு பரிந்துரை கடிதம் அனுப்பியுள்ளார். அதன் அடிப்படையில் மனுதாரர் சங்கத்தை சேர்ந்த பள்ளிகளின் விண்ணப்பங்களை பரிசீலித்து அவற்றின் கட்டிடங்களை வரைமுறை படுத்தி 3 மாதங்களுக்குள் கல்வித்துறை உரி முடிவு எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.
