தனியார் நிறுவனங்களில் தமிழர்களுக்கு வேலை 75% இட ஒதுக்கீடு வழங்க சட்டம் நிறைவேற்ற வேண்டும்: அன்புமணி வலியுறுத்தல்
சென்னை: பாமக தலைவர் அன்புமணி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தூத்துக்குடியில் அமைக்கப்பட்டுள்ள வின்பாஸ்ட் கார் ஆலையில் 3500 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இப்போது ஆயிரம் பேருக்கும் மேல் அந்த ஆலையில் பணி செய்து வருகின்றனர். அவர்களில் 200 தமிழர்களுக்கு வேலை என்பது வெறும் 20 சதவீதம் மட்டும் தான். தொழில் முதலீடுகள் தொடர்பாக தமிழக அரசு கூறும் புள்ளி விவரங்கள் உண்மை என்றால், 2021ம் ஆண்டுக்குப் பிறகு கையெழுத்திடப்பட்ட 900க்கும் மேற்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் எத்தனை ஒப்பந்தங்களில் முதலீடுகள் பெறப்பட்டு ஆலைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். மேலும், தொழிற்சாலைகளில் தமிழர்களுக்கு வேலை கிடைப்பதை உறுதி செய்ய, தனியார் நிறுவன வேலைவாய்ப்புகளில் தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு 75 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் சட்டத்தை நிறைவேற்ற வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.