திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு ரூ.15.94 லட்சம் மதிப்பிலான மின்சார வாகனத்தை நன்கொடையாக வழங்கியது பெங்களூருவைச் சேர்ந்த தனியார் நிறுவனம்
திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு ரூ.15.94 லட்சம் மதிப்பிலான மின்சார மினி சரக்கு வாகனத்தை பெங்களூருவைச் சேர்ந்த தனியார் நிறுவனம் நன்கொடையாக வழங்கியுள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோயில், ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டத்தில், திருமலை என்ற திருவேங்கட மலையில் அமைந்துள்ள புகழ்பெற்ற வைணவத் தலம் ஆகும். இந்த கோயில் உலகெங்கிலும் இருந்து தினமும் லட்சக்கணக்கான பக்தர்களால் தரிசனம் செய்யப்படுகிறது.
வேங்கடமலை சுமார் 3,200 அடி உயரமுடையதும், 10.33 சதுர மைல்கள் பரப்பளவுடையதும் ஆகும். இக்கோயிலில் பக்தர்களுக்கு வழங்கப்படும் லட்டு பிரசாதம் புவிசார் குறியீடு பெற்றுள்ளது. இத்தலத்தில் பக்தர்கள் தங்கள் நேர்முக நோன்புகளின் ஒரு பகுதியாக திருமுடி காணிக்கை செய்வதும், கோயிலின் வருமானத்தில் முக்கிய பங்கைக் கொண்டுள்ளது. இக்கோயில் இந்தியாவிலேயே அதிக வருமானம் தரும் கோயில்களில் ஒன்றாக திகழ்கிறது.
இந்த கோயிலுக்கு பக்தர்கள் தங்களால் முயன்ற நிதியுதவியை செய்து வருகின்றனர். அதன்படி இன்று பெங்களூருவைச் சேர்ந்த தனியார் நிறுவனம் மின்சார வாகனத்தை நன்கொடையாக வழங்கியது. பெங்களூருவைச் சேர்ந்த (Tivolt Electric Vehicles Private Limited) டிவோல்ட் எலக்ட்ரிக் வெஹிக்கிள்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் ரூ.15,94,962 மதிப்புள்ள மோன்ட்ரா எலக்ட்ரிக் ஏவியேட்டர் (e-SCV) வாகனத்தை இன்று திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு நன்கொடையாக வழங்கியது. இதற்காக, நிறுவனத்தின் பிரதிநிதிகள் ஸ்ரீவாரி கோயில் முன் வாகனத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்து, ஸ்ரீவாரி கோயில் துணை EO ஸ்ரீ லோகநாதத்திடம் சாவியை ஒப்படைத்தனர். TTD வாரிய உறுப்பினர் ஸ்ரீ பானு பிரகாஷ் ரெட்டி நிகழ்ச்சியில் பங்கேற்றார்.