Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான ஜெட் விமானத்தை பறிமுதல் செய்த அமலாக்கத்துறை: ஐதராபாத் ஏர்போர்ட்டில் பரபரப்பு

ஐதராபாத்: பணமோசடி விசாரணையின் ஒரு பகுதியாக, ரூ.14 கோடி மதிப்புள்ள ஜெட் விமானத்தை அமலாக்க இயக்குநரகம் பறிமுதல் செய்துள்ளது. தெலங்கானா தலைநகர் ஐதராபாத்தில் செயல்பட்டு வந்த பால்கன் குரூப் நிறுவனம் தங்கள் நிறுவனத்தில் முதலீடு செய்தால் இரட்டிப்பு வருமானம் கிடைக்கும் என்று விளம்பரம் செய்திருந்தது. அதிக வருமானதுக்கு ஆசைப்பட்டு ஏராளமானோர் முதலீடு செய்தனர். மக்களிடம் இருந்து ரூ.1700 கோடி வசூல் செய்யப்பட்டுள்ளது.

இதில்,பல முதலீட்டாளர்களுக்கு பணம் திருப்பி கொடுக்கப்பட்டுள்ளது. ரூ.850 கோடியை அந்த நிறுவனம் திருப்பி கொடுக்கவில்லை. இந்த மோசடியில் மொத்தம் 6,976 பேர் ஏமாற்றப்பட்டனர். அவர்கள் சைபராபாத் போலீசில் புகார் கொடுத்தனர். கடந்த ஜனவரி 22ம் தேதி அந்த நிறுவனத்தின் உரிமையாளர் அமர்தீப் குமார் ஜெட் விமானம் மூலம் இந்தியாவை விட்டு தப்பினார். அமர்தீப் மற்றும் அவரது நிறுவனத்தில் உள்ள அதிகாரிகள் யாரையும் தொடர்பு கொள்ள முடியவில்லை.

அமர்தீப்பின் நிறுவனத்திற்குச் சொந்தமான 8 இருக்கைகள் கொண்ட வணிக ஜெட் விமானம் ஐதராபாத் சர்வதேச விமான நிலையத்தில் நேற்று முன்தினம் தரையிறங்கியதை அமலாக்கத்துறை அலுவலக அதிகாரிகள் கண்டறிந்தனர். ரூ.14 கோடிக்கு கடந்த ஆண்டு வாங்கப்பட்டுள்ள ஜெட் விமானத்தில் அதிகாரிகள் சோதனை நடத்தினர். விமானத்தின் பைலட் உள்ளிட்ட ஊழியர்கள் மற்றும் அமர்தீப்புக்கு நெருக்கமானவர்களின் வாக்குமூலங்கள் பெறப்பட்டன.முதலீட்டாளர்களிடம் மோசடி செய்த பணத்தில் விமானம் வாங்கப்பட்டுள்ளது என தெரியவந்துள்ளது. இதை தொடர்ந்து ஜெட் விமானம் பறிமுதல் செய்யப்பட்டது.