Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

தனியார் நிலத்தில் 1,500 அடியில் ஆழ்குழாய் கிணறு பெத்தம்பட்டியில் குடிநீர் தட்டுப்பாடு

*அமைச்சரிடம் கிராம மக்கள் புகார்

தாராபுரம் : திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே பொள்ளாச்சி செல்லும் சாலையில் உள்ளது ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பெத்தம்பட்டி கிராமம். 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கும் இப்பகுதியில் பொதுமக்களின் குடிநீர் விநியோகத்திற்காக ஊராட்சி நிர்வாகத்தின் சார்பில் 150 அடி ஆழத்தில் ஆழ்குழாய் கிணறு அமைத்து அதில் இருந்து கிடைக்கும் குடிநீரை சின்டெக்ஸ் தொட்டிகளில் நிரப்பி, பொதுமக்களுக்கு வினியோகம் செய்து வந்தனர்.

இந்நிலையில் ஊராட்சியை சேர்ந்த பொது மக்களின் பிரதிநிதிகள் 20க்கும் மேற்பட்டோர் நேற்று தாராபுரம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்ப நிகழ்ச்சிக்கு வந்திருந்த அமைச்சர் கயல்விழி செல்வராஜ், ஆர்டிஓ பெலிக்ஸ் ராஜா ஆகியோரை நேரில் சந்தித்து தங்கள் கிராமத்திற்கு கடந்த 15 நாட்களாக குடிநீர் விநியோகம் செய்வது தடைபட்டுள்ளது என்றும், தனிநபர் ஒருவர் விதிமுறைக்கு மீறி செய்த செயலால் தற்போது ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் குடிநீரின்றி 15 நாட்களாக தவித்து வருவதாகவும் புகார் கூறினர்.

கிராம மக்களின் பிரதிநிதிகள் கூறுகையில், ‘‘கடந்த 15 நாட்களுக்கு முன் இதே பகுதியைச் சார்ந்த அரசமரத்து தோட்டம் என்ற விவசாய நிலத்தில் கிட்டுச்சாமி என்பவர் சுமார் 1,500 அடி ஆழத்திற்கு ஆழ்குழாய் கிணற்றை அமைத்து அதிலிருந்து தண்ணீர் எடுத்து தனது தோட்டம், வயல்கள், தோப்புகளுக்கு தண்ணீர் பாய்ச்சி வருகிறார். ஊராட்சியின் பொது குடிநீர் விநியோக கிணற்றுக்கு நூறு மீட்டருக்கு அப்பால் தான் விவசாயக் கிணறுகள் அமைக்கப்பட வேண்டும் என்ற விதிமுறைகள் உள்ளன.

ஆனால் இந்த விதிமுறைகளை முற்றிலும் புறக்கணித்துவிட்டு பொது குடிநீர் விநியோக ஆழ்குழாய் கிணற்றின் 15 அடி தூரத்திலேயே 1,500 அடிக்கும் மேலான ஆழத்தில் ஆழ்குழாய் கிணறு அமைத்தால் 150 அடி ஆழத்தில் உள்ள பொது குடிநீர் விநியோக ஆழ்துளை கிணற்றில் நிலத்தடி நீர் வற்றி போய் அதைவிட ஆழமாக தோண்டப்பட்ட கிட்டுச்சாமி என்பவரின் ஆழ்குழாய் கிணறுக்கு குடிநீர் அனைத்தும் வடிந்து சென்றுவிட்டது. இதன் காரணமாக பொதுமக்கள் குடிநீர் கிடைக்காமல் பெரும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.

எனவே மாவட்ட நிர்வாகமும், கோட்டாட்சியரும், தாராபுரம் வட்டார வளர்ச்சி அலுவலர்ரும் உடனே தலையிட்டு எந்தவித முன் அனுமதி பெறாமல் விதிமுறைகளை மீறி தோண்டப்பட்டு தண்ணீரை விவசாய பூமிகளுக்கு பயன்படுத்தி வரும் தனி நபர் மீது நடவடிக்கை எடுப்பதுடன் விதிமுறைகளுக்கு எதிராக தோண்டப்பட்ட ஆழ்குழாய் கிணறுக்கு தடை விதிக்க வேண்டும். தங்கள் கிராமத்திற்கு தங்கு தடையற்ற குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

கிராம மக்களின் அத்தியாவசிய கோரிக்கை குறித்து உடனடியாக மாவட்ட கலெக்டரின் கவனத்திற்கு கொண்டு செல்வதாகவும், அதுவரை கிராமத்தினர் அமைதி காக்க வேண்டும் என்றும் அமைச்சர் கயல்விழி கிராம மக்களிடம் கூறினார். கடந்த 15 நாட்களாக குடிநீர் கிடைக்காமல் அவதிப்பட்டு வரும் தங்களுக்கு உடனடியாக லாரி மூலம் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் கிராமத்தினர் கூறினர். இது குறித்து வட்டார வளர்ச்சி அலுவலரிடமும், மாவட்ட கலெக்டரிடமும் பேசிவிட்டு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறியதையடுத்து கிராம மக்கள் கலைந்து சென்றனர்.