Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

3 மாதமாக சம்பளம் வழங்கப்படாததால் நெல்லை தனியார் கல்லூரியில் பேராசிரியர்கள் திடீர் போராட்டம்

கேடிசி நகர் : நெல்லை பாளையங்கோட்டையில் உள்ள ஒரு மகளிர் கல்லூரியில் சுமார் 3,600 மாணவிகள் படித்து வருகின்றனர். இங்கு 100க்கும் மேற்பட்ட நிர்வாக பணியாளர்கள் மற்றும் 70க்கும் மேற்பட்ட ஆசிரியரல்லாத பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு கடந்த 3 மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை என்று தெரிகிறது.

இதை கண்டித்தும், தங்களுக்கு உடனடியாக சம்பளம் வழங்கக் கோரியும், நேற்று காலை பேராசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்தனர். இதை அறிந்து கல்லூரி நிர்வாகம் சார்பில் கல்லூரியின் மெயின் கதவு அடைக்கப்பட்டது.

இதனால் வெளியில் அமர்ந்து பேராசிரியர்கள், பணியாளர்கள் போராட்டம் நடத்தினர்.

இந்த போராட்டம் குறித்து முன்கூட்டியே அறிந்திடாத மாணவிகள் நேற்று காலை வழக்கம் போல் கல்லூரிக்கு வந்த நிலையில் கதவுகள் பூட்டப்பட்டிருந்தால் ஆங்காங்கே நின்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு காணப்பட்டது.

இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்ட பேராசிரியர்கள் கூறியதாவது: கடந்த 3 மாத காலமாக எங்களுக்கு சம்பளம் வழங்கப்படாமல் உள்ளது. இதுகுறித்து பொறுப்பு முதல்வரிடம் கேட்டபோது, வங்கிக் கணக்கினை நிர்வகிக்கும் அதிகாரம் முதல்வர் மற்றும் செயலாளர் இணைந்து கையொப்பமிட்டு செயல்படுத்தக் கூடியது என்றும், தற்போது கல்லூரிக்குச் செயலாளர் இல்லை என்றும், வங்கிக் கணக்கு முடக்கி வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

யார் வங்கிக் கணக்கினை முடக்கினார்கள்? எதற்காக செய்யப்பட்டது? என்றும் நாங்கள் அறிந்து கொள்ள விரும்புகிறோம். மேலும் கல்லூரிக்கு ஒரு செயலர் நியமனம் செய்து மாதந்தோறும் முறையாக ஊதியம் அளிக்க வேண்டும். இது தொடர்பாக எங்கள் கவன ஈர்ப்பு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு பேராசிரியர்கள் தெரிவித்தனர். ஆசிரியர்களின் திடீர் போராட்டத்தால் கல்லூரி வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

இதை தொடர்ந்து ஆசிரியர்களின் போராட்டத்துக்கு ஆதரவாக முன்னாள் லே செயலாளர் வேதநாயகம், மேல்நிலைப் பள்ளிகளின் முன்னாள் மேலாளர் புஷ்பராஜ், இன்ஜினியர் டேவிட் அன்பழகன், வக்கீல் ஜெனி, டியூக் துரைராஜ் ஆகியோர் சென்று அவர்களிடம் குறைகளை கேட்டறிந்தனர். உடனடியாக சம்பளம் வழங்குவதற்கு சம்பந்தபட்ட கல்லூரி நிர்வாகிகளிடம் பேசி நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.

அதன்பிறகு மாலையில் கிறிஸ்தவ தேவாலயங்களில் பணிபுரியும் உபதேசியார்கள் மற்றும் பணியாளர்கள் நலவாரிய தலைவர் விஜிலா சத்யானந்த், வேதநாயகம், சாம்சன் பால்ராஜ், ஜெனி மற்றும் ஆசிரியர் பிரதிநிதிகள் நெல்லை மாவட்ட கலெக்டரை சந்தித்து ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்க கோாி மனு அளித்தனர்.