Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

ரூ.1.50 கோடி மதிப்புள்ள நகையை விட்டு சென்ற வழக்கில் தனியார் வங்கியின் மாஜி பெண் மேலாளரிடம் கிடுக்கிப்பிடி விசாரணை: லாக்கரில் நகை திருட்டில் ஈடுபட்டது அம்பலம்

சென்னை: தனியார் வங்கியில் ரூ.1.50 கோடி மதிப்புள்ள நகையை விட்டு சென்ற வழக்கில், லாக்கரில் வைத்திருந்த நகை திருட்டில் ஈடுபட்டது அம்பலமானதால் மாஜி பெண் மேலாளரிடம் போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை வேளச்சேரி 100 அடி பிரதான சாலையில் ஒரு பிரபல தனியார் வங்கி இயங்கி வருகிறது. இந்த வங்கிக்கு கடந்த 5ம் தேதி பர்தா அணிந்தபடி சுமார் 30 வயது மதிக்கத்தக்க பெண் வந்துள்ளார். அவர் வங்கி மேலாளரை சந்தித்து, தனது பெயர் ஷர்மிளா என்றும், கணவரின் பெயரில் இங்கு வங்கி கணக்கு உள்ளது. அதேபோல் எனது பெயரில் வங்கி கணக்கு மற்றும் லாக்கர் தொடங்க வேண்டும் என்று கூறியுள்ளார். அதற்கு சில ஆவணங்கள் தேவை என வங்கி அதிகாரி கூறியதும், தனது கைப்பையை அங்கேயே வைத்துவிட்டு பர்தா அணிந்த பெண் வெளியேறிவிட்டார்.

அதன்பிறகு வங்கி அதிகாரியை சந்தித்த நபர், தனக்கு அருகே ஒரு கைப்பை இருந்ததை பார்த்து, அதை வங்கி அதிகாரியிடம் கொடுத்துள்ளார். அந்த கைப்பை கொண்டு வந்தவர் யார் என்று சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்ததில், இதற்குமுன் பர்தா அணிந்து வந்த பெண் கொண்டு வந்த கைப்பை என தெரியவந்தது. அப்பெண்ணை எங்கு தேடியும் கிடைக்கவில்லை. இதனால், கைப்பையை வங்கி அதிகாரிகள் திறந்து சோதனை செய்தனர். அந்த பைக்குள் ஒன்றே கால் கிலோ எடையில் ரூ.1.50 கோடி மதிப்பிலான 24 கேரட் தங்க பிஸ்கட் மற்றும் நகைகள் இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். அவற்றை லாக்கரில் பத்திரப்படுத்தி வைத்தனர்.

இதுபற்றிய புகாரின்பேரில் வேளச்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து, சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து, நகையுடன் பையை விட்டு சென்ற பெண் குறித்து தீவிரமாக விசாரித்தனர். அப்போது, அப்பெண் இதே வங்கியில் கடந்த ஓராண்டுக்கு முன் மேலாளராக பணியாற்றிய பத்மபிரியா (எ) பத்மகுமாரி (37) என்பது தெரியவந்தது. மேலும், இவர் தற்போது வேளச்சேரியில் ஒரு தனியார் தங்கும் விடுதியில் தங்கியிருப்பதும் தெரிந்தது. இதை தொடர்ந்து, விடுதியில் இருந்த பத்மபிரியாவை போலீசார் விசாரணைக்கு வரும்படி நேற்று தொலைபேசி மூலம் அழைத்தனர்.

பின்னர் அவரிடம் நடத்திய விசாரணையில், பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தது. இவரது கணவர் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் சொந்தமாக தொழில் செய்ய பலரிடம் கடன் வாங்கி உள்ளார். ஆனால், தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் கடன் கொடுத்தவர்களுக்கு பணத்தை திருப்பி கொடுக்க முடியவில்லை. கடன் கொடுத்தவர்கள் தொடர்ந்து பணத்தை திருப்பி கேட்டதால் அவர் தற்கொலை செய்து கொண்டார்.

இந்நிலையில் கடன்காரர்கள் தொடர்ந்து இவருக்கும் நெருக்கடி கொடுக்கவே தான் பணியாற்றும் வேளச்சேரி வங்கி லாக்கரில் வேறொரு நபரின் 250 கிராம் நகைகளை திருடி உள்ளார். இதையடுத்து, லாக்கர் திருட்டு சம்பந்தமாக எழுந்த புகாரின் பேரில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி கடந்த செப்டம்பர் மாதம் சிறையில் அடைத்த நிலையில் ஒரு வாரத்துக்கு முன்பு ஜாமீனில் வெளிவந்துள்ளார். மேலும், இதேபோல் முன்பு குணவதி என்பவரின் லாக்கரில் இருந்து ஒன்றேகால் கிலோ நகையை திருடி வீட்டில் வைத்துள்ளார்.

இந்நிலையில் நகை திருட்டு தொடர்பாக மீண்டும் கைது செய்யப்படுவோமோ என்று பயந்து பர்தா அணிந்து வந்து, எப்படியாவது அந்த லாக்கரில் நகையை வைத்து விட்டு சென்று விடலாம் என முயற்சி செய்துள்ளார். ஆனால் அது முடியாததால் நகை பையை விட்டுவிட்டு சென்றது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் அவரிடம் தொடர்ந்து பல கோணங்களில் கிடுக்கிப்பிடியாக தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர்.