கீவ்: கைதிகளை பரிமாற்றம் செய்து கொள்ள ரஷ்யாவுடன் பேச்சு நடத்துவது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்தார். ரஷ்யா-உக்ரைன் இடையே தலா 1000 கைதிகளை பரிமாற கடந்த மே மாதம் ஒப்பந்தம் ஆனது. இரண்டாம் கட்டமாக மிகவும் நோய் வாய்ப்பட்ட,காயமடைந்த கைதிகளை இரு நாடுகளும் பரிமாறினர். இரண்டாம் கட்டத்துக்கு பின் இது முடிவடைந்தது.
உக்ரைன் தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் செயலாளர் ருஸ்தம் உமரோவ் நேற்றுமுன்தினம் கூறுகையில்,‘‘ ரஷ்யாவுடன் கைதிகளை பரிமாறுவது தொடர்பாக, மத்தியஸ்தம் செய்யும் துருக்கி மற்றும் ஐக்கிய அரபு எமிரேட் நாடுகளுடன் ஆலோசனை தொடங்கியுள்ளது’’ என்றார். இந்த நிலையில்,ரஷ்யாவில் உள்ள 1,200 உக்ரைன் கைதிகளை பரிமாற்றம் செய்வதற்கான நடவடிக்கைகள் விரைவில் தொடங்கப்படும் என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி நேற்று தெரிவித்தார். ஆனால் இந்த தகவல் பற்றி ரஷ்யா கருத்து ெதரிவிக்கவில்லை.


