கைதாகி சிறையில் உள்ள நாகேந்திரனுக்கு கல்லீரல் பாதிப்பு பரிசோதனை செய்ய வேண்டும்: வேலூர் சிஎம்சி மருத்துவமனைக்கு ஐகோர்ட் உத்தரவு
சென்னை: பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த ஆண்டு ஜூலை மாதம் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் நாகேந்திரன் உள்ளிட்ட 27 பேர் கைது செய்யப்பட்டனர். வழக்கில் முதல் குற்றவாளியாக உள்ள நாகேந்திரன் கல்லீரல் பாதிப்பு காரணமாக கடந்த சில மாதங்களாக சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில், சிறையில் நாகேந்திரனுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படவில்லை என்றும் அவருக்கு உரிய சிகிச்சை வழங்க வேண்டும் எனக்கோரி அவரது மனைவி விசாலாட்சி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி எம்.எஸ்.ரமேஷ், வி.லட்சுமி நாராயணன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, நாகேந்திரனுக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளவதற்கு அவரின் குடும்பத்தினர் 3 பேர் கல்லீரல் தானம் செய்ய தயாராக இருப்பதாகவும், அதுதொடர்பாக நாகேந்திரன் குடும்பத்தினர் அளித்த விவரங்களை காவல்துறை தரப்பில் அரசு கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் தாமோதரன் தாக்கல் செய்தார்.
இதையடுத்து நீதிபதிகள், நாகேந்திரனின் உடல்நிலை குறித்து வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் அவரை அனுமதித்து மருத்துவ பரிசோதனைகளை செய்ய வேண்டும். நாகேந்திரனுக்கு கல்லீரல் தானம் செய்ய இருக்கும் குடும்பத்தினரின் உடல் நிலையையும் பரிசோதிக்க வேண்டும்.
இந்த பரிசோதனைகளுக்கு பின்னர் நாகேந்திரனை மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டும் என்று சிஎம்சி மருத்துவர்கள் அறிவுறுத்தினால், நாகேந்திரனுடன் அவருக்கு உதவியாக அவரின் குடும்பத்தினர் ஒருவர் மட்டும் உடன் இருக்கலாம். உடன் இருக்கும் குடும்ப உறுப்பினர் மொபைல் போன் பயன்படுத்த அனுமதி இல்லை என்று உத்தரவிட்டு விசாரணையை வரும் 18ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.