பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கைதிகள் பல்வேறு குற்றவழக்குகளில் கைதாகி அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். அதுமட்டுமின்றி தீவிரவாத சதி செயலில் ஈடுபட்டவர்கள், போதை பொருள் விற்பனை, பாலியல் பலாத்காரம், கொலை, கொள்ளை போன்ற வழக்குகளில் சிக்கிய பிரபல ரவுடிகளும் இந்த சிறையில் அடைத்துவைக்கப்பட்டுள்ளனர். இதனால் பரப்பனஅக்ரஹார சிறையில் பரபரப்புக்கு பஞ்சமில்லை.
சொத்து குவிப்பு வழக்கில் கைதாகி அடைக்கப்பட்டிருந்த சசிகலாவிடம் சிறை அதிகாரிகள் லஞ்சம் வாங்கி கொண்டு சொகுசு வசதி செய்து கொடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இது குறித்து விசாரணை நடத்தி முறைகேட்டில் ஈடுபட்ட சிறை அதிகாரி, கண்காணிப்பாளர், வார்டன்கள் பணியிடமாற்றம் செய்யப்பட்டனர். அதுமட்டுமின்றி இங்கு அடைக்கப்பட்டுள்ள பிரபல ரவுடிகள் லட்சக்கணக்கில் பணத்தை வாரி இறைத்து சிறையிலேயே கஞ்சா புகைப்பது, மது அருந்துவது, செல்போனில் பேசுவது, கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடுவது என்று அமர்க்களப்படுத்துகின்றனர்.
இவர்களுக்கு சிறை அதிகாரிகள் உடந்தையாக செயல்படுகின்றனர். இது போன்று சிறையில் கைதிகள் அனைத்து வசதிகளுடன் இருக்கும் வீடியோ அவ்வப்போது சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தும். இதன் பிறகு மாநில அரசு விழித்துக்கொண்டு சிறையில் சோதனை நடத்தி அதிகாரிகளை இடமாற்றம் செய்யும். ஆனால் என்ன நடவடிக்கை எடுத்தாலும் சிறையில் விதிமுறைகள் மீறப்படுவது வழக்கமாக நடந்து வருகிறது என்றே சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
பணவசதி படைத்தவர்களுக்கு சிறை கூட சகல சவுகரியங்கள் கொண்ட வீடு தான். சட்டம், தண்டனை அவர்களை எந்த வகையிலும் பாதிப்படைய செய்வது கிடையாது. சமீபத்தில் ரசிகரை கொலை செய்த வழக்கில் கைதான நடிகர் தர்ஷன், பிரபல ரவுடிகளுடன் சிறை வளாகத்தில் நாற்காலியில் அமர்ந்து மது அருந்துவதும், புகைப்பிடிப்பதும் போன்ற வீடியோ சமூக வலைதளத்தில் வைரலானது. இதையடுத்து அவரை பெல்காம் சிறைக்கு அரசு மாற்றியது. நடிகர் தர்ஷன் ஜாமீனில் வெளியே வந்து மீண்டும் கைதாகி பரப்பன அக்ரஹாரா சிறையிலேயே அடைக்கப்பட்டுள்ளார்.
அவர் தனக்கு தலையணை, மெத்தை போன்ற வசதிகள் கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்நிலையில் கைதிகள் மது அருந்திவிட்டு சிறையில் கும்மாளம் அடிப்பது போன்ற வீடியோ வைரலானது. இதில் தீவிரவாத சதிச்செயலில் கைதாகி சிறையில் இருப்பவன் செல்போனில் சரளமாக பேசிக்கொண்டிருப்பதும் பரபரப்ைப ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தை பாஜ, மஜத உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கண்டித்தன. காங்கிரஸ் அரசு தீவிரவாத சதிச்செயலுக்கு துணை போவதாக குற்றம்சாட்டின. இதற்கிடையில் சிறைக்கைதிகளுக்கு சலுகைகள் அளித்தது தொடர்பாக அரசு உயர்மட்ட போலீஸ் குழு அமைத்துள்ளது.
இவர்கள் ஆய்வு மேற்கொண்டு சிறை அதிகாரிகள், துணை கண்காணிப்பாளர் ஆகியோரை பணியிடமாற்றம் செய்துள்ளனர். இந்த குழு மாதம் ஒரு முறை கர்நாடக சிறைகளில் சோதனை மேற்ெகாண்டு நடவடிக்கைகளை கண்காணிக்கும் என்று கூறியுள்ளார்கள். சிறையில் நேர்மையான அதிகாரிகள் யாரோ இருப்பதால் தான் உள்ளே நடக்கும் அத்துமீறல்கள் அடிக்கடி சமூகவலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்துகிறது என்று காவல்துறை வட்டாரத்தில் பேசப்படுவதையும் அலட்சியமாக எடுத்துக்கொள்ள முடியாது.
