Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

30 நாட்கள் சிறையில் இருந்தால் பதவி பறிப்பு மசோதா; நாடாளுமன்ற கூட்டுக்குழுவை புறக்கணித்த திரிணாமுல், சமாஜ்வாதி: எதிர்க்கட்சிகளின் முடிவால் ஒன்றிய அரசுக்கு சிக்கல்

புதுடெல்லி: பிரதமர், முதலமைச்சர்கள் மற்றும் அமைச்சர்கள் 30 நாட்கள் காவலில் வைக்கப்பட்டால் அவர்களைப் பதவி நீக்கம் செய்ய வகைசெய்யும் சர்ச்சைக்குரிய மசோதாக்களை ஆய்வு செய்வதற்கான நாடாளுமன்றக் கூட்டுக் குழுவில் (JPC) பங்கேற்கப் போவதில்லை என திரிணாமுல் காங்கிரஸும், சமாஜ்வாதி கட்சியும் அறிவித்துள்ளது எதிர்க்கட்சிகள் முகாமில் பெரும் சலசலப்பையும், குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது. பிரதமர், முதலமைச்சர்கள் மற்றும் அமைச்சர்கள் குற்ற வழக்குகளில் கைது செய்யப்பட்டு 30 நாட்கள் காவலில் இருந்தால், அவர்களைப் பதவி நீக்கம் செய்ய வகைசெய்யும் அரசியலமைப்புத் திருத்த மசோதாக்களை ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ளது.

இந்த மசோதாக்களை ஆய்வு செய்ய, பாஜக எம்பி தலைமையில், ஆளும் என்டிஏ கூட்டணி உறுப்பினர்கள் பெரும்பான்மையாக இருக்கும் நாடாளுமன்றக் கூட்டுக் குழுவை அமைக்க ஒன்றிய அரசு தீவிரம் காட்டி வருகிறது. கடந்த 2014ம் ஆண்டுக்குப் பிறகு, ஆளும் ஒன்றிய அரசால் நாடாளுமன்ற குழுக்கள் கையாளப்படுவதாகவும், எதிர்க்கட்சிகளின் திருத்தங்கள் நிராகரிக்கப்பட்டு, முறையான விவாதங்கள் தவிர்க்கப்படுவதாகவும் எதிர்கட்சிகள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றன.

இந்த நிலையில், இந்த நாடாளுமன்ற கூட்டுக் குழு என்பது கண்துடைப்பு நாடகம் என்று கூறி, அதில் சேரப்போவதில்லை என திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் சமாஜ்வாதி கட்சிகள் அறிவித்துள்ளன. இதுகுறித்து திரிணாமுல் எம்பி டெரிக் ஓ பிரையன் கூறுகையில், ‘அரசியலமைப்பிற்கு விரோதமான இந்த மசோதாவை ஆய்வு செய்ய நாடாளுமன்ற கூட்டுக் குழுவை அமைப்பது என்பது, முக்கியப் பிரச்னைகளிலிருந்து கவனத்தை திசைதிருப்பும் முயற்சியாகும்’ என்று கடுமையாக விமர்சித்துள்ளார். அவரைத் தொடர்ந்து, சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் கூறுகையில், ‘இந்த மசோதாவின் அடிப்படை நோக்கமே தவறானது.

இந்த மசோதாவைக் கொண்டு வந்த ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷாவே, கடந்த காலத்தில் தன் மீது போடப்பட்ட வழக்குகள் போலியானவை என்று கூறியுள்ளார். அப்படியென்றால், யார் வேண்டுமானாலும் குற்ற வழக்குகளில் சிக்க வைக்கப்படலாம் அல்லவா? என கட்சித் தலைவரான ஆசம் கான் போன்றவர்கள் இப்படித்தான் சிறையில் தள்ளப்பட்டனர்’ என்று அவர் கூறினார். திரிணாமுல் காங்கிரஸின் புறக்கணிப்பு எதிர்பார்க்கப்பட்ட ஒன்று என்றாலும், தற்போது சமாஜ்வாதி கட்சியும் அதே முடிவை எடுத்திருப்பது காங்கிரஸ் கட்சிக்கு பெரும் அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. எதிர்க்கட்சிகளின் ஒற்றுமைக்காக காங்கிரஸும் இந்தக் குழுவைப் புறக்கணிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

ஆரம்பத்தில், நாடாளுமன்றக் கூட்டுக் குழு விவாதங்கள் நீதிமன்ற விசாரணைகளிலும், பொதுக் கருத்தை உருவாக்குவதிலும் முக்கியப் பங்கு வகிக்கும் என்பதால், நாடாளுமன்ற கூட்டுக் குழுவில் சேர காங்கிரஸ் முடிவு செய்திருந்தது. ஆனால், தற்போது சமாஜ்வாதி கட்சியின் திடீர் முடிவால் எதிர்க்கட்சிகளின் முகாமில் நிச்சயமற்ற தன்மை நிலவுவதோடு, இந்த மசோதாக்களுக்கு எதிரான எதிர்க்கட்சிகளின் முடிவு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. எதிர்கட்சிகளின் அடுத்தடுத்த புறக்கணிப்பு முடிவால், நாடாளுமன்ற கூட்டுக் குழுவை ஒருங்கிணைப்பதில் ஆளும் ஒன்றிய பாஜக கூட்டணி அரசுக்கும் நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.